ஆதரவற்ற குழந்தைகளுக்காக துடுப்பு மட்டையை ஏலம் விடவுள்ள ராகுல்

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவதற்காக ‘உலகக் கிண்ணம் 2019’ தொடரில் பயன்படுத்திய துடுப்பு மட்டையை ஏலத்துக்கு விட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் கே.எல். ராகுல் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்துள்ள கே.எல்.ராகுல் துடுப்பாட்டம், விக்கெட் காப்பு என அனைத்திலும் அண்மைய காலங்களில் சிறந்து விளங்குகின்றார்.

ஒருநாள் மற்றும் ரி-20 போட்டிகளில் அசத்திவரும் அவரை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்க்க வேண்டும் என பல முன்னாள் வீரர்களும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இறுதியாக இடம்பெற்ற நியூசிலாந்துடனான ரி-20 தொடரை 5 – 0 என இந்தியா வெல்வதற்கு ராகுல் முக்கிய காரணமாக திகழ்ந்தார். ஆனால், அவர் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அந்த தொடரில் இந்தியா வெள்ளையடிப்பு மூலம் தோல்வியடைந்தது.

இதனால் கே.எல்.ராகுலின் பெறுமதி பெரிதும் உணரப்பட்டதுடன், அவரை டெஸ்ட் அணியில் சேர்க்குமாறும் தேர்வுக்குழுவுக்கு அறிவுறுத்தல்களை பலர் வழங்கினர்.

இந்நிலையில், உலகக் கிண்ணத் தொடரில் தான் பயன்படுத்திய துடுப்பு மட்டை, கையுறை, கால் காப்புகள் மற்றும் ‘ஹெல்மெட்’ ஆகியவற்றை ஏலத்தில் விட முடிவெடுத்துள்ளதாக ராகுல் அறிவித்துள்ளார். ஏலம் வழியாகக் கிடைக்கும் தொகை, அறக்கட்டளையின் உதவியுடன் ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடந்த வருடம் இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடரில் 9 போட்டிகளில் விளையாடிய ராகுல், ஒரு சதம், இரு அரைசதங்களுடன் 361 ஓட்டங்களைக் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.