இங்கிலாந்து- அவுஸ்ரேலியா அணிகள் பாகிஸ்தான் மண்ணில் விளையாட வேண்டும்: சங்கா வேண்டுகோள்

இங்கிலாந்து, அவுஸ்ரேலியா அல்லது தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் பாகிஸ்தான் மண்ணில் விளையாட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், மெர்லிபோர்ன் கிரிக்கெட் கழகத்தின் தலைவருமான குமார் சங்கக்கார வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அண்மைக்காலமாகவே சர்வதேச கிரிக்கெட் அணிகள், பாகிஸ்தான் மண்ணில் விளையாட வேண்டும் என்பதனை வலியுறுத்திவரும் சங்கக்கார, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் அங்கு சென்று விளையாடியதனை பாராட்டினார்.

அத்துடன், மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் நீண்டகால நோக்கத்தின் ஒரு பகுதியாக, சங்கக்கார தலைமையிலான மெர்லிபோர்ன் கிரிக்கெட் கழக அணி, பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது.

இந்த நிலையில் இங்கிலாந்து, அவுஸ்ரேலியா அல்லது தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளும் அங்கு சென்று விளையாட வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பாதுகாப்பு விடயங்களைக் கருத்திற் கொண்டு ஒரு ஆசிய அணி அல்லது இரண்டாம் நிலை அணியொன்று அங்கு சென்று விளையாடுவது என்பது பெரிய விடயமாகும்.

அதேபோல, இங்கிலாந்து, அவுஸ்ரேலியா அல்லது தென்னாபிரிக்கா கூட, பாதுகாப்பு உறுதி செய்யப்படும்போது உண்மையில் அங்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடுவது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். எமது எம்.சி.சியின் சுற்றுப்பயணம் அதற்கு முன்னோடியாக இருக்கும்.

2009ஆம் ஆண்டுக்குப் பிறகு நான் மீண்டும் பாகிஸ்தானுக்குச் செல்வேன் என்று நினைத்தபோது எனக்கு வேடிக்கையாக இருந்தது. உண்மையில் பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஆனால் இங்கே 10 வருடங்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை.

ஓய்வுபெற்ற பிறகு நான் மீண்டும் எனது கிரிக்கெட் தலைக்கவசத்தை அணிந்துகொண்டு இவ்வளவு இரசிகர்களின் ஆதரவோடு விளையாடியது எனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த இடங்களில் ஒன்றாக இது இருந்தது.

பாகிஸ்தான் அணியுடன் உடனே 5 டெஸ்ட் தொடரை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. முதலில் 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரும், தொடர்ந்து சிறிது இடைவெளி விட்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் விளையாடலாம்.

அத்துடன், ஒரு பலமான பாகிஸ்தான் அணி தமது சொந்த மைதானத்தில் ரசிகர்களுக்கு முன்னால் விளையாடுவது உலக கிரிக்கெட்டுக்கு ஏற்படக்கூடிய சிறந்த விடயங்களில் ஒன்றாகும்’ என கூறினார்.

கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி மீது பாகிஸ்தானின் லாகூரில் வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் போது, பேருந்தில் பயணித்த வீரர்களில் சங்கக்காராவும் உள்ளடங்குகின்றார். அந்தச் சமயத்தில் சங்காவுக்கு சிறிய காயமும் ஏற்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.