2016ஆம் ரி-20 உலகக்கிண்ணத்தை வென்ற மே.தீ அணியை விட தற்போதைய அணியே பலமிக்கது: பிராவோ

கடந்த 2016ஆம் ஆண்டு ரி-20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியை விட, தற்போதைய மேற்கிந்திய தீவுகள் அணியே பலமிக்க அணி என அணியின் சகலதுறை வீரர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ண தொடரை கிரிக்கெட் வீரர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இத்தொடர் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தாலும், மறுபுறம் வீரர்கள் மனதளவில் இத்தொடருக்காக தயாராகி வருகின்றனர்.

இந்தநிலையில் இதுகுறித்து மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரர் டுவைன் பிராவோ கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

‘இரு மாதங்களுக்கு முன்பு நடந்த இலங்கைக்கு அணிக்கெதிரான ரி-20 கிரிக்கெட் தொடரின் போது, அணி வீரர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் பயிற்சியாளர் பில் சிமோன்ஸ் வீரர்களின் துடுப்பாட்ட வரிசை குறித்து விளக்கினார். அதில் எனது பெயர் 9ஆவது இடத்தில் இருந்தது.

எந்த ஒரு ரி-20 அணியிலும் நான் 9ஆவது துடுப்பாட்ட வரிசையில் களம் கண்டதில்லை என்று சக வீரர்களிடம் கூறினேன். அணியின் துடுப்பாட்ட வரிசையை கண்டு வியக்கிறேன்.

கடந்த 2016ஆம் ஆண்டு ரி-20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியை விட தற்போதைய மேற்கிந்திய தீவுகள் அணியே பலமிக்கதாக இருக்கிறது. இது கேலி அல்ல. அணியில் 10ஆவது வரிசை வீரர்கள் கூட துடுப்பெடுத்தாடக்கூடிய திறமைசாலிகள்.

இத்தனைக்கும் மற்றொரு சகலதுறை வீரர் சுனில் நரைன் கூட இந்த பட்டியலில் இல்லை. அவரும் வந்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். சுனில் நரைன் 10 அல்லது 11ஆவது வரிசையில் துடுப்பெடுத்தாடுவார். இப்போது ரி-20 போட்டிகளில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும் விளையாடுகிறார்.

மேற்கிந்திய தீவுகள் அணி முழு பலத்துடன் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை யோசித்து பாருங்கள். எவின் லீவிஸ் ஆட்டமிழந்தால் ஹெட்மயர் வருவார். ஹெட்மயரை வெளியேற்றினால், நிகோலஸ் பூரன் இறங்குவார். லென்டில் சிமோன்சை ஆட்டமிழக்க செய்தால், ஆந்த்ரே ரஸ்ஸல் வருவார். அவரை வீழ்த்தினால் அணித்தலைவர் பொல்லார்ட், ரோவ்மன் பவல் என்று வந்து கொண்டே இருப்பார்கள். கடைசியில் என்னையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இந்த துடுப்பாட்ட வரிசை உலகின் எந்த ஒரு எதிரணியையும் அச்சுறுத்தும். இது தான் என்னை பரவசப்படுத்துகிறது. எனவே ஒரு பந்து வீச்சாளராக எதிரணியின் ஓட்ட வேகத்தை குறிப்பாக கடைசி கட்டத்தில் கட்டுப்படுத்த முயற்சிப்பேன்’ என கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்