திறமையையும் பலத்தையும் அடையாளம் கண்டால் ரி-20 போட்டியில் வெற்றி காணலாம்: திமுத்

தம்மிடம் இருக்கும் திறமையையும், பலத்தையும் அடையாளம் கண்டால், ரி-20 போட்டிகளில் வெற்றிபெற முடியும் என ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

முன்னாள் ரி-20 உலக சம்பியனான இலங்கை அணி, இறுதியாக நடைபெற்ற மூன்று இருதரப்பு ரி-20 தொடர்களையும் இழந்து தரவரிசையில் 7ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ரி-20 போட்டிகளில் வெற்றிபெறுவதற்கு அணி என்ன செய்ய வேண்டுமென திமுத்திடம் வினவப்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில்,

‘எமது வீரர்கள், பவர் ப்ளே ஓவர்களில் வேகமாக துடுப்பெடுத்தாட முயன்று விக்கெட்டுகளை பறிகொடுக்கிறோம். ஏனைய அணிகள் இரண்டு வீரர்களை மாத்திரமே வேகமாக ஓட்டங்களை எடுக்கும் வகையில் திட்டங்களை வகுத்துள்ளனர். அத்துடன், குறித்த வீரர்களும் களத்தடுப்பாளர்களுக்கு இடையில் பந்துகளை அடித்து ஓட்டங்களை பெற்றுக்கொடுக்கின்றனர். ஆனால், எமது வீரர்கள் களத்தடுப்பாளருக்கு மேல் பந்துகளை அடிக்க முயற்சிக்கிறனர்.

லசித் மாலிங்கவை தவிர்ந்த ஏனைய பந்துவீச்சாளர்கள் கடைசி ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு சிரமப்படுகின்றனர். அதுமாத்திரமின்றி ஒருநாள், டெஸ்ட் மற்றும் ரி-20 என அனைத்து போட்டிகளிலும் மத்திய ஓவர்களில் விக்கெட்டுகளை கைப்பற்றுவதற்கும் தடுமாறுகின்றோம். விக்கெட் எடுக்கும் திறமையை வளர்த்துக்கொண்டால், ரி-20 போட்டிகளில் வெற்றிபெற முடியும்.

எம்மிடம் இருக்கும் திறமையையும், பலத்தையும் அடையாளம் கண்டால், ரி-20 போட்டிகளில் வெற்றிபெற முடியும். நாம் இதற்கு முன்னரும் ரி-20 போட்டிகளில் விளையாடியுள்ளோம். எனவே, ஏனைய அணிகள் எவ்வாறு விளையாடுகிறது என்பதை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு, எமது அணிக்கு என ஒரு திட்டத்தை வகுத்து விளையாடினால், எம்மால் போட்டிகளில் வெற்றிபெற முடியும்’ என கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.