ஐ.சி.சி. வகுத்துள்ள சில வழிமுறைகளில் குளறுபடிகள் உள்ளன: ஷகீப் ஹல் ஹசன்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்கும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து, சர்வதேச கிரிக்கெட் சபை வகுத்துள்ள சில விடயங்களில் தனக்கு சந்தேகம் இருப்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான ஷகீப் ஹல் ஹசன் தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால், கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து சர்வதேச போட்டிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில் பெரும்பாலான நாடுகளில் நடைமுறையில் இருந்த முடக்கநிலை தளர்த்தப்பட்டு, முதற்கட்டமாக வீரர்களுக்கு பயிற்சி அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வைரஸ் தொற்றும் அச்சம் தொடர்ந்தும் நீடிப்பதன் காரணமாக, கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை சர்வதேச கிரிக்கெட் சபை வகுத்துள்ளது. இதில் இரு வீரர்களுக்கு இடையே 1.5 மீட்டர் இடைவெளி (5 அடி) இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் தனக்கு சந்தேகம் இருப்பதாக ஷகீப் ஹல் ஹசன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “3 அல்லது 5 அடி இடைவெளி அல்ல, 12 அடி தூரம் வரை கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக இப்போது நாங்கள் கேள்விப்படுகிறோம். அப்படி என்றால் ஒரு ஓவர் முடிந்ததும் களத்தில் நிற்கும் இரண்டு துடுப்பாட்ட வீரர்களும் நெருங்கி வந்து சந்திக்கக்கூடாது அல்லவா? அவர்கள் தங்களது துடுப்பாட்ட முனையிலேயே நின்று விடலாமா? துடுப்பாட்ட வீரரில் இருந்து விக்கெட் காப்பாளர் எவ்வளவு தூரத்தில் நிற்க வேண்டும்? அருகருகே நிற்கும் களத்தடுப்பாளர்களின் நிலைமை? இது போன்ற விடயங்கள் குறித்து ஐ.சி.சி. விவாதிக்க வேண்டியது அவசியமாகும். பாதுகாப்பு தான் முதலில் முக்கியம். கொரோனா பாதிப்பு நிலைமையை முழுமையாக ஆராய்ந்த பிறகே மறுபடியும் கிரிக்கெட் போட்டி தொடங்குவது குறித்து ஐ.சி.சி. முடிவு செய்யும்” என கூறினார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம், சூதாட்ட தரகர் தொடர்பு கொண்டதை மறைத்த குற்றத்துக்காக பங்களாதேஷின் முன்னணி வீரர் ஷகீப் அல் ஹசனுக்கு, சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) ஊழல் தடுப்பு விதிமுறையின் மூன்று வகையான குற்றச்சாட்டில் ஒரு வருட ஒத்திவைக்கப்பட்ட தடை உட்பட இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.