ஷஹித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி..!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சகலதுறை வீரருமான ஷஹித் அப்ரிடிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை முதல் தனது உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அப்ரிடி டுவிட்டரில் பதிவில் “கடந்த வியாழக்கிழமை முதல் நான் சுகயீனம் அடைந்துள்ளேன். எனது உடல் வலி அதிகரித்துள்ளது. நான் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டேன். எதிர்பாராத நிலையில் எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நான் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இன்ஷா அல்லாஹ் “என பதிவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான பாகிஸ்தான் அணியின் இரண்டாவது சர்வதேச கிரிக்கெட் வீரர் அப்ரிடி ஆகும், இதற்கு முன்னர் சமீபத்தில், பாகிஸ்தானின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தௌபீக் உமருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

அப்ரிடி தலைமையில் பாகிஸ்தான் அணி கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இருபதுக்கு இருபது உலக் கிண்ணத்தை வென்றது. 1998 முதல் 2018 வரை 398 ஒருநாள், 27 டெஸ்ட் மற்றும் 99 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ள அப்ரிடி 2017 இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

இருப்பினும் இந்த ஆண்டு மார்ச் மாதம் இடம் பெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரிலும் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்