இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் பட்லர், வோக்ஸ் அரைசதம் கடந்து கைகொடுக்க இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மான்செஸ்டரில் நடந்தது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 326, இங்கிலாந்து 219 ரன்கள் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில், 2வது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்திருந்தது. யாசிர் ஷா (12), முகமது அபாஸ் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

நான்காம் நாள் ஆட்டத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 45வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்த யாசிர் ஷா (33), ஸ்டூவர்ட் பிராட் ‘வேகத்தில்’ வெளியேறினார். ஆர்ச்சர் பந்தில் நசீம் ஷா (4) போல்டானார். இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 169 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. முகமது அபாஸ் (3) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் பிராட் 3, வோக்ஸ், ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

வோக்ஸ் அபாரம்: பின், 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு ரோரி பர்ன்ஸ் (10) ஏமாற்றினார். டாம் சிப்லே (36), கேப்டன் ஜோ ரூட் (42) ஆறுதல் தந்தனர். ஸ்டோக்ஸ் (9), போப் (7) நிலைக்கவில்லை. இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 117 ரன் எடுத்து திணறியது.

பின் இணைந்த ஜாஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ் ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. இவர்கள் இருவரும் அரைசதம் கடந்தனர். ஆறாவது விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்த போது யாசிர் ஷா ‘சுழலில்’ பட்லர் (75) சிக்கினார். ஸ்டூவர்ட் பிராட் (7) ஏமாற்றினார். ஷஹீன் அப்ரிதி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய வோக்ஸ் வெற்றியை உறுதி செய்தார்.

இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வோக்ஸ் (84), பெஸ் (0) அவுட்டாகாமல் இருந்தனர். பாகிஸ்தானின் யாசிர் ஷா 4 விக்கெட் வீழ்த்தினார்.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 1–0 என, முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட் வரும் 13ல் சவுத்தாம்ப்டனில் துவங்குகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்