ஹைதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த டெல்லி கேப்பிடல்ஸ்!

ipl -அபுதாபியில் நடைபெற்ற 2-வது எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை டெல்லி அணி வீழ்த்தியது. இதனால் இறுதிப் போட்டியில், மும்பையுடன் டெல்லி மோதுவது உறுதியாகியுள்ளது.

 

நேற்றைய போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஷிகர் தவன் இருவரும் துவக்க வீரர்களாக களம் இறங்கினர். ஸ்டோய்னிஸ் 27 பந்துகளில் 38 ரன்கள் குவிக்க, மறுபுறம் தவன் அதிரடி காட்டினார். அவர் 50 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார். இதில் 6 ஃபோர், 2 சிக்ஸ்களும் அடங்கும். அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 21 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஷிம்ரான் ஹெட்மயர் அதிரடி ஆட்டம் ஆடி 22 பந்துகளில் 42 ரன்கள் குவித்தார். இதனால் டெல்லி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சில் பெரிய ஏமாற்றம் தந்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸின் பேட்டிங்கிலும் சன்ரைசர்ஸ் அணி சொதப்பியது. துவக்க வீரராக இறங்கிய ப்ரியம் கார்க் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார். முக்கியமான இந்த போட்டியில் டேவிட் வார்னர் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மணிஷ் பாண்டே 21 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஜேசன் ஹோல்டர் 11 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக களம் இறங்கிய கேன் வில்லியம்சன் அணியைக் காப்பாற்ற போராடினார். அவ்வப்போது சிக்ஸ் அடித்தார். ஓரளவு நம்பிக்கை வந்த தருணத்தில், 67 ரன்களில் அவர் ஆட்டம் இழந்தார். அதன் பின் ஹைதராபாத் அணி சரிவை சந்தித்தது. அப்துல் சமத் 16 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரஷித் கான் 7 பந்துகளில் 11 ரன்கள் சேர்த்தார். கோஸ்வாமி டக் அவுட் ஆனார்.

டெல்லி அணியின் ரபாடா 19-வது ஓவரில் திருப்பம் ஏற்படுத்தினார். ஒரே ஓவரில் சமத், கோஸ்வாமி, ரஷித் கான் விக்கெட்களை வீழ்த்தினார். 4 ஓவர்களில் 29 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தினார் ரபாடா. ஸ்டோய்னிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

இதையடுத்து ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியிடம் தோல்வி அடைந்தது. வெற்றி பெற்ற டெல்லி கேபிடல்ஸ் இறுதிப் போட்டியில் மும்பையுடன் மோதுகிறது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்