ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தோழமையினை தமிழக அரசிடம் எதிர்பார்க்கின்றோம் !

ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தோழமையினை தமிழக அரசிடம் எதிர்பார்க்கின்றோம் ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அரசவை தீர்மானம்
இலங்கை மக்களுக்கான தமிழக அரசின் மனிதாபிமான நிவாரண உதவிகள் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளதோடு, நா.தமிழீழ அரசாங்கத்தின் கனேடிய உறுப்பினர் திரு.நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு அரசாங்கத்தின் மனிதாபிமான நிவாரண உதவிகள், ஈழத்தமிழ் மக்களை சென்றடைவதை, தமிழக அரசு நேரடியாக கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும் என கோரியுள்ள இத்தீர்மானம், ஈழத்தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான அரசியல் தோழமையினையும் தமிழக அரசிடம் இருந்து ஈழத்தமிழர்கள் எதிர்பார்ப்பதாக கோரியுள்ளது.
சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணியாக இருக்கின்ற இராணுவச் செலவீனங்களின் அடிப்படையில் தமிழர் தாயகப்பகுதிகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினை வெளியேற்ற தமிழ்நாடு அரசு, இந்த வேளையில் வலியுறுத்த வேண்டும் என்பதனையும் எதிர்பார்ப்பதாக தீர்மானம் கோரியுள்ளது.
கடந்த மே21-22 ஆகிய நாட்கள் இடம்பெற்றிருந்த நா.தமிழீழ அரசாங்கத்தின் அசரவையில் உறுப்பினர் திரு நிமால் விநாயகமூர்த்தி அவர்களால முன்மொழியபட்டு, அரசவையினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முழுவிபரம் :
தமிழ்நாட்டுக்கும் ஈழத்தமிழர் தேசத்துக்குமான உறவு என்பது உணர்வுபூர்வமானது. அது தொப்புள்கொடி உறவு. நிலத்தால் வேறுபட்டிருந்தாலும், உணர்வால், கலாசாரத்தால் பிரிக்கவியலாத ஒரு இனமாகும். ஈழத் தமிழர்களுக்கான நீதிக்கும் அரசியல் இறைமைக்கும் செயல்வடிவம் கொடுப்பதில் இந்திய அரசின் பங்களிப்பு முக்கியமானதொன்றாகும் தங்கியிருக்கின்றது. இதற்கான திறவுகோல் எப்போதும் தமிழ்நாடாகவே இருக்கின்றது. இது வரலாறு முழுவதும் நிருபிக்கப்பட்டுவரும் உண்மையாகும்.
ஈழத்தமிழ் மக்கள் பாதிக்கப்படும் போதும், எமக்காக குரல் கொடுக்கும், எமக்குதவும் முதல் கரமாக, தமிழ்நாடே இருக்கின்றது. இந்த பின்புலத்தில்தான், மாண்புமிகு முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு, இலங்கைதீவின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் ஈழத்தமிழர் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதை, ஈழத்தமிழர்களாகிய நாம் வரவேற்று மகிழ்கின்றோம். இது தொடர்பில், ஏற்கனவே, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர். உருத்திரகுமாரன் அவர்கள், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின், மனிதபிமான நிவாரண உதவி முயற்சியை வரவேற்றிருந்ததோடு,
சிங்கள அரசாங்கங்கள் எவையும் தமிழ்மக்களை பாரபட்டசமின்றி நீதியாக நடத்தப் போவதில்லை. இந் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகளிலும் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுவார்கள். இந்நிலையில் நேரடி உதவிப்பொறிமுறையொன்றினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே தலைமை தாங்கி உருவாக்குமாறும் கோரியிருந்ததர் என்பதனையும் இந்த சந்தர்பத்தில் மீ;ண்டுமொருமுறை சுட்டிக்காட்டுகின்றது.
இதேவேளை ஈழத்தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான அரசியல் தோழமையினையும் நாம் இவ்வேளையில் எதிர்பார்கின்றது.
தீர்மானம் :
1. நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது, இலங்கைத்தீவில் தமிழர்களுக்கான அரசியல் வெளி முழுமையாக இல்லாத நிலையிலும், புலம்பெயர் ஈழத்தழர்களுக்கான தேசக்கட்டுமானமாகவும் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் பெருவிருப்பினை இலங்கைத்தீவுக்கு வெளியே சர்வதேச அரசியல் வெளியில் வெளிப்படுத்தும் ஜனநாயக போராட்ட வடிவம் என்னும் வகையில், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் முன்னெடுக்கப்படும், நலிவுற்ற இலங்கை மக்களுக்கான, மனிதாபிமான நிவாரண உதவியை வரவேற்பதுடன், அதற்கான ஆதரவையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தோழமையினை வெளிப்படுத்தும் வகையில் நிதியுதவியையும் வழங்கும்.
2. தமிழ்நாட்டு அரசாங்கத்தின் இந்த மனிதாபிமான நிவாரண உதவிகள், தமிழர் தாயகத்தின் நலிவுற்ற எமது உறவுகளை சென்றடைவதை, தமிழக அரசு நேரடியாக கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும் என்பதனையும் வேண்டுகின்றது.
3. இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 1.4ம் சரத்தில் குறிப்பிட்டவாறு, இலங்கைத்தீவின் வடக்கு-கிழக்கு பகுதி தமிழர்களின் தாயகம் என்பதனை உறுதிசெய்தே, சிறிலங்காவுக்கான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதோடு, சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணியாக இருக்கின்ற இராணுவச் செலவீனங்களின் அடிப்படையில் தமிழர் தாயகப்பகுதிகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினை வெளியேற்ற தமிழ்நாடு அரசு, இந்த வேளையில் வலியுறுத்த வேண்டும் என்பதனையும் எதிர்பார்கின்றது.
4. மேலும், உலகெங்கும் பரந்துவாழும் உலகத்தமிழ் உறவுகள், மாண்புமிகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் முன்னெடுக்கப்படும் இலங்கை மக்களுக்கான மனிதாபிமான நிவாரண திட்டத்திற்கு தாராளமாக உதவிகளை வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றது என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
May be an image of 3 people, people sitting, people standing, eyeglasses and indoor

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்