தாய்மையை போற்றிய பெண் காவலர்.. முகமறியாத குழந்தைக்கு தாயான நெகிழ்ச்சி சம்பவம்..!

கேரளாவில் கடத்தப்பட்ட குழந்தையை காப்பாற்றி, தாயாகவும் மாறியுள்ளார் பெண் காவல்துறை அதிகாரி ஒருவர். இது பலரையும் நெகிழ செய்திருக்கிறது.

Police Officer Ramya Saved child and breastfed while rescue operation

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த ஆஷிகா என்னும் பெண் கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி சேவாயூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது கணவர் ஆதில் மற்றும் மாமியார் தனது குழந்தையை திருடிச் சென்றுவிட்டதாக தெரிவித்திருக்கிறார். பிறந்து 12 நாட்களே ஆன, தனது குழந்தையை மீட்டுத் தரும்படி ஆஷிகா கண்ணீருடன் கோரிக்கை வைத்த நிலையில், குழந்தையை மீட்க பெண் காவலர் ரம்யா உள்ளிட்ட அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

Police Officer Ramya Saved child and breastfed while rescue operation

அப்போது, சுல்தான் பத்தேரியில் ஆஷிகாவின் கணவர் ஆதில் இருப்பது காவல் துறையினருக்கு தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து அங்கே விரைந்து சென்ற போலீசார் குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர். அப்போது குழந்தை மிகவும் சோர்வுடன் இருந்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ந்த காவல்துறையினர் அருகில் உள்ள மருத்துவமனையில் குழந்தையை சேர்ந்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் உடலில் சர்க்கரையின் அளவு குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதற்காக சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நேரத்தில் பசியால் குழந்தை அழத் துவங்கியிருக்கிறது. அப்போது அங்கு இருந்த ரம்யா மருத்துவர்களிடத்தில் தனக்கு ஒரு வயதில் குழந்தை இருப்பதாகவும் தான் இந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா? எனவும் கேட்டுள்ளார். அதற்கு மருத்துவர்கள் ஒப்புதல் அளிக்கவே, தாய்ப்பால் அளித்து குழந்தையின் பசியை போக்கியுள்ளார் ரம்யா. இதனையடுத்து குழந்தை பத்திரமாக ஆஷிகாவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

Police Officer Ramya Saved child and breastfed while rescue operation

இந்நிலையில், ரம்யாவின் செயலை நேரில் அழைத்து பாராட்டிய கேரள டிஜிபி அனில்காந்த் பாராட்டு சான்றிதழையும் வழங்கியுள்ளார். மேலும், ரம்யா காவல்துறையின் முகமாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், கேரள உயர்நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரன்,”பசியால் வாடிய சிசுவின் உயிரை காப்பாற்றிய பணி பாராட்டுதலுக்கு உரியது” எனத் தெரிவித்திருக்கிறார். அதுமட்டும் அல்லாமல், பல்வேறு அதிகாரிகளும் ரம்யாவின் இந்த மனிதாபிமான செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.