இங்கிலாந்தில் சுகாதார பாதுகாப்பு உடைகளுக்கு தட்டுப்பாடு!

இங்கிலாந்தில் சிகிச்சையின்போது வைத்தியர்கள் அணியும் சுகாதார பாதுகாப்பு உடைகளுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவல் இங்கிலாந்திலும் தீவிரமாகவே உள்ள நிலையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதன்காரணமாக வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை பணியாளர்கள் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றார்கள்.

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது இவர்களும் கொரோனா வைரஸால் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது.

அந்தவகையில், நேற்று வரையிலான கடந்த 20 நாட்களில் கொரோனாவுக்கு வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் என 95 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், சிகிச்சையின்போது வைத்தியர்கள் அணியும் சுகாதார பாதுகாப்பு உடைகளுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

கையிருப்பில் உள்ள பாதுகாப்பு உடைகள் இன்னும் சில நாட்களுக்கே பொதுமானதாக உள்ளது. இதையடுத்து, துருக்கியிடம் இருந்து 4 இலட்சம் உடைகள் கேட்கப்பட்ட நிலையில் 40 ஆயிரம் உடைகளே இதுவரை கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுகாதார பாதுகாப்பு உடைகளுக்கு தட்டுப்பாடு இருப்பதால் பழைய உடைகளை சுத்தம்செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது ஆய்வகங்களில் அணியும் வெள்ளை உடைகளை தற்காலிகமாக வைத்தியர்கள் உபயோகிக்கலாம் என்று இங்கிலாந்தின் பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதற்கு, பிரித்தானிய மருத்துவ சங்கம் பலத்த எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ‘‘வைத்தியர்களின் உயிருக்குப் பாதுகாப்பு இருந்தால்தான் அவர்களால் கொரோனா நோயாளிகளைக் காப்பாற்ற இயலும்.

எனவே வைத்தியர்களின் உயிருக்கும் மதிப்பளியுங்கள்! புதிய கவச உடைகள் கிடைக்காமல் போனால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை வைத்தியர்கள் நிறுத்த நேரிடும்’’ என்று சங்கம் எச்சரித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்