“75 ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தை பேசிய அதே நேரத்தில் நான் இன்று உங்களுடன் பேசுகிறேன்.”

“சரியாக 75 ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தை பேசிய அதே நேரத்தில் நான் இன்று உங்களுடன் பேசுகிறேன். மாபெரும் விடுதலை என அவர் அன்றழைத்த அந்த நோக்கத்திற்காக,  உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல தியாகங்களை செய்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் மதிப்பளிக்கும் வணக்கத்தைச் செலுத்துகின்ற செய்தியாக அவரின் செய்தி அன்றிருந்தது. அந்தப் போரானது ஒரு முழுமையான போராக இருந்தது.

அது அனைவரையும் பாதித்தது, அதன் தாக்கத்திலிருந்து எவரும் விடுபட்டிருக்கவில்லை. சேவை செய்ய அழைக்கப்பட்ட ஆண்களாகவோ, பெண்களாகவிருக்களாகவோ, ஒருவரையொருவர் பிரிந்த குடும்பங்களாகவோ இருக்கலாம், அல்லது போர் முயற்சியை ஆதரிப்பதற்கு தமது திறன்களைப் பயன்படுத்துமாறும் புதிய பாத்திரங்களை ஏற்குமாறும் கேட்கப்பட்ட மக்களாக இருக்கலாம், இதில் அனைவருக்கும் ஒரு பங்கு உண்டு.”

யுத்தத்தின் தொடக்கத்தில் பார்த்தபோது  எமது நிலைமை இருண்மையானதாகத் தெரிந்தது. முடிவு தொலைவானதாக இருந்தது. விளைவுகள் நிச்சயமற்றதாக இருந்தது. ஆனால் காரணம் சரியானது என்று நாங்கள் நம்பிக்கை வைத்திருந்தோம். எனது தந்தை வானொலியில் உரையாற்றியது போல, அந்த நம்பிக்கையுடன் எமது பயணம் இருந்தது.”

“ஒருபோதும் கைவிடாதீர்கள், ஒருபோதும் விரக்தியடையாதீர்கள்”- என்பதே ஐரோப்பாவின் வெற்றி நாளின் செய்தியாக இருந்தது. பக்கிங்ஹாம் அரண்மனையின் பல்கனியில் இருந்து நானும் என் சகோதரியும் எங்கள் பெற்றோர் மற்றும் வின்ஸ்டன் சர்ச்சிலுடன் கூட இருந்து பார்த்த மகிழ்ச்சியான காட்சிகளை நான் தெளிவாக நினைவில் கொள்கிறேன்.

“நாம் ஐரோப்பாவில் வெற்றியைக் கொண்டாடிய போதும் மேலும் தியாகங்கள் இருக்கும் என நாம் அறிந்திருந்தும், அரண்மனைக்கு வெளியிலும் மற்றும் நாடு முழுவதிலும் கூடியிருந்த கூட்டத்தினரின் மகிழ்ச்சியின் உணர்வு ஆழமானது. ஓகஸ்ட் மாதத்துக்கு முன்னரே, தூர கிழக்கில் சண்டை நிறுத்தப்பட்டு இறுதியில் போர் முடிவுக்கு வந்தது.”

“அந்த பயங்கரமான மோதலில் பலர் தங்கள் உயிரைக் கொடுத்தார்கள். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நாங்கள் நிம்மதியாக வாழ அவர்கள் போராடினார்கள். சுதந்திரமான தேசங்களில் சுதந்திரமான மக்களாக நாம் இன்று வாழ்வதற்கு அவர்கள் இறந்தார்கள். எங்கள் குடும்பங்கள் மற்றும் சுற்றுப்புறங்கள் பாதுகாப்பாக இருக்க அவர்கள் எல்லாவற்றையும் பணயம் வைத்தனர். நாம் அவர்களை நினைவில் வைத்திருக்க வேண்டும்.”

“நான் தற்போது என் தந்தையின் வார்த்தைகளையும், நம்மில் சிலர் நேரில் அனுபவித்த மகிழ்ச்சியான கொண்டாட்டங்களையும் பிரதிபலிக்கையில், ஐக்கிய இராச்சியம், கொமன்வெல்த் மற்றும் எங்கள் அனைத்து நேச நாடுகளும் காட்டிய வலிமை மற்றும் துணிவிற்கு நான் நன்றியுள்ளவராகவிருக்கிறேன்.

“போரில் இருந்து திரும்பி வராதவர்களை கௌரவிப்பதற்கான சிறந்த வழி, அது மீண்டும் நடக்காது என உறுதி செய்வதே என்பதை, போர்க்கால தலைமுறையினர் அறிவர். அவர்களின் தியாகத்திற்கு செய்யும் மிகப்பெரிய மதிப்பளிப்பு என்னவென்றால், ஒரு காலத்தில் எதிரிகளாக இருந்த நாடுகள் இப்போது நண்பர்களாக உள்ளன, அமைதி, சுகாதாரம் மற்றும் செழிப்புக்காக அவை ஒன்றுடன் ஒன்று பக்கபலமாக உழைக்கின்றன.”

“இந்த சிறப்பு ஆண்டுவிழாவை நாம் விரும்பியபடி செய்யமுடியாதுள்ளமையானது இன்று கடினமாகத் தோன்றலாம். அதற்கு பதிலாக எங்கள் வீடுகளிலிருந்தும், வீட்டு வாசல்களிலிருந்தும் நினைவில் கொள்கிறோம். ஆனால் எங்கள் வீதிகள் வெறுமையானதாக இல்லை. நாம் ஒருவரிலொருவர் வைத்திருக்கும் அன்பாலும் அக்கறையாலும் அவை நிறைந்திருக்கின்றன.  எமது நாட்டை இன்று நான் பார்க்கும்போது, ஒருவரையொருவர் பாதுகாக்கவும் ஆதரவளிக்கவும் நாங்கள் என்ன செய்யத் தயாராக இருக்கிறோம் என்பதைப் பார்க்கும்போது, அந்த துணிச்சலான வீரர்கள், மாலுமிகள் மற்றும் விமானப்படை வீரர்கள் என அனைவரையும் அங்கீகரித்து போற்றி நாங்கள் இன்னும் ஒரு தேசமாக இருக்கிறோம் என்று பெருமையுடன் சொல்கிறேன்”

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.