இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களை நாட்டிற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை!
இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களை நாட்டிற்கு அழைத்துச் செல்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கான இந்திய தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் இந்த விமானத்திற்கான பயணிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் அவசரமாக நாடு திரும்ப வேண்டிய நிலையில் இருப்பவர்களுக்கு, குறிப்பாக நிர்க்கதியாகியுள்ள குடிபெயர் தொழிலாளர்கள், விசா காலாவதியான நிலையில் தங்கியிருப்பவர்கள், மருத்துவ உதவிகள் தேவைப்படுவோர், கர்ப்பிணிகள், பெண்கள், முதியவர்கள், குடும்ப உறுப்பினரின் மரணத்தை தொடர்ந்து உடனடியாக இந்தியா திரும்புவதற்கு கோரிக்கைகளை முன் வைத்திருப்போர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு வெளிநாடுகளில் சிக்குண்டிருப்பவர்களுக்காக இந்திய உள்துறை அமைச்சினால் 2020 மே 5ஆம் திகதி வெளியிடப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட செயற்பாட்டு முறைமையின் பிரகாரம், முன்னுரிமை வழங்கப்படும்.
இந்த விமான சேவை தொடர்பான விபரங்கள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியர்கள் பலர் நாடு திரும்புவதற்கான கோரிக்கையை முன்வைத்திருக்கும் நிலையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்களை மாத்திரமே குறித்த விமானத்தில் அனுமதிக்க முடியும். இந்நிலையில் பயணத்துக்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இ-மெயில் மூலமாக இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் அறிவித்தல்கள் அனுப்பப்படும்.
இந்த விமான பயணத்துக்கான செலவீனத்தை பயணிகள் பொறுப்பேற்க வேண்டிய தேவையுள்ளதுடன், அவர்கள் இந்தியாவை சென்றடைந்ததும் கட்டாயமான தனிமைப்படுத்தல் நடைமுறைக்கு உள்ளாக்கப்படுவார்கள். தனிமைப்படுத்தல் வசதிகள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட செயற்பாட்டு முறைமை குறித்த தகவல்கள் மாநில மற்றும் UT (யூனியன்/ டெரிடோரிட்டி) அரசாங்கங்களால் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த தகவல்களும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியர்கள் இதுவரையில் தம்மை இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளத்தில் பதிவு செய்ய தவறியிருப்பின் கீழ்வரும் இணையத்தளத்தில் பதிவு செய்யுமாறு கோரப்படுகிறார்கள். https://hcicolombo.gov.in/COVID_helpline
நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் தங்கியிருக்கும் இந்திய பிரஜைகள் பொறுமையை கடைப்பிடிக்குமாறும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் அறிவித்தல்களை அறிந்து கொள்ளுமாறும் நாம் கோரிக்கை விடுக்கின்றோம்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை