இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லாத ஒன்று – மருத்துவ குழு எச்சரிக்கை!

கொரோனா  சமூகப் பரவல் நாட்டில் ஏற்கெனவே அதிகரித்துள்ள நிலையில், நோய்த் தொற்று தாக்குதலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்பது சாத்தியமில்லாத செயல் என எய்ம்ஸ் மருத்துவர்கள், ஐ.சி.எம்.ஆர் உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு எச்சரிக்கைவிடுத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய (திங்கட்கிழமை) நிலைவரப்படி 1.9 இலட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

அத்துடன் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 16 பேர் கொண்ட மருத்துவர் நிபுணர் குழு அறிக்கையொன்றை தயாரித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் கையளித்துள்ளது.

குறித்த அறிக்கையில்,  “சமூகப் பரவல் மூலமான கொரோனா பாதிப்பு நாட்டில் ஏற்கெனவே அதிகரித்து விட்டது. ஏரானமானோா் இந்த சமூகப் பரவலால் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இந்தச் சூழலில், நோய்த் தொற்று தாக்குதலை முழுமையாக கட்டுப்படுத்தவிட முடியும் என்பது சாத்தியமில்லாத ஒன்று.

மருத்துவ வசதிகள் போதிய அளவில் இல்லாத காரணத்தால் கொரோனா நோய்த் தொற்று பரவும் வேகத்தை மட்டுப்படுத்தும் நோக்கத்துடனேயே  இந்த கடுமையான தேசிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்த எதிா்பாா்ப்பு  நான்காம் கட்ட பொதுமுடக்கத்துக்குப் பிறகு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு,  பொருளாதார பாதிப்புகளுக்கிடையே நிறைவேறியிருப்பதாகவே தெரிகிறது.

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொது முடக்க கட்டுப்பாடுகள் என்பது சா்வதேச அளவில் கொரோனா  பாதிப்பால் ஏற்பட்ட 22 இலட்சம் உயிரிழப்புகள்,  நோய்த் தொற்று பரவல் வீரியம் ஆகியவற்றின் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். ஆனால்  இந்த நடைமுறை முழுமையான பலனைத் தரவில்லை என்பதை அதன்பிறகு ஏற்பட்ட பாதிப்புகள் நிரூபித்திருக்கின்றன.

குறிப்பாக   நோய்த் தொற்றை பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகள் வகுக்கப்படும்போது  தொற்றுநோய் நிபுணா்களுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை. அவ்வாறு தொற்றுநோய் நிபுணா்களுடன் மத்திய அரசு கலந்தாலோசித்து முடிவுகளை எடுத்திருந்தால்  பாதிப்புகளை இன்னும் சிறப்பாக கட்டுப்படுத்தியிருக்க முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.