டோனியின் மன அழுத்தத்தை ‘பப்ஜி கேம்’ தான் பெருமளவு குறைத்துள்ளது: மனைவி தகவல்!

முடக்கநிலையின் போது, இந்தியக் கிரிக்கெட் அணியின் மகத்தான வீரரான மகேந்திர சிங் டோனியின் மன அழுத்தத்தை ‘பப்ஜி கேம்’ தான் பெருமளவு குறைத்ததாக, அவரது மனைவி சாக்ஷி கூறியுள்ளார்.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் நேரலையில் தொகுப்பாளர் ரூபா ரமணியுடன் உரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

‘டோனி குறித்த விடயங்கள் எங்கிருந்துதான் வருகிறது எனத் தெரியவில்லை. ஆனால் உங்கள் மீது ஊடக வெளிச்சம் இருக்கும்போது நீங்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். மக்கள் ஒவ்வொருவரும் அவர்களது கருத்துகளை முன் வைப்பார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட டோனியின் ஓய்வு குறித்த வதந்திகள் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தன. எது நடந்தாலும் சரி எனக்கு என் தொலைபேசிக்கு அழைப்பும் மற்றும் குறுஞ்செய்தியும் வந்த வண்ணம் உள்ளன.

நாங்கள் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை மிகவும் தவறவிடுகிறோம். ஐ.பி.எல். போட்டிகள் நடக்குமா அல்லது நடக்காதா எனத் தெரியவில்லை. எனது மகளும் சென்னை சுப்பர் கிங்ஸ் குறித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறாள். இருப்பினும் என்ன நடந்தாலும் இந்த வருடம் கிரிக்கெட் இல்லை. காரணம் நாங்கள் முன்னதாகவே வரும் நாட்களை எங்கே செலவு செய்யப்போகிறோம் என்பது குறித்துத் திட்டமிட்டு விட்டோம்.

கிரிக்கெட் இருந்தால் இருக்கும். ஆனால் டோனி வரும் நாட்களை மலையேற்றத்திற்குத் திட்டமிட்டு இருக்கிறார். நாங்கள் உத்தரகாண்ட் செல்ல இருக்கிறோம். அங்குள்ள ஒரு சிறிய கிராமத்தில் தங்குவதற்கும் திட்டமிட்டுள்ளோம். இது மட்டுமன்றி வீதிப் பயணங்களை மேற்கொள்ளவும் திட்டமிட்டிருக்கிறோம். இந்த ஊரடங்கு நாட்களில் டோனியின் மன அழுத்தத்தை வீடியோ கேம்கள்தான் (ஒளித்தோற்ற விளையாட்டு) பெருமளவு குறைத்தன. குறிப்பாக பப்ஜி. எங்களது படுக்கைகளை பப்ஜிதான் ஆக்கிரமித்துள்ளது” என கூறினார்.

ஐ.சி.சி.யின் அனைத்து சம்பியன் கிண்ணங்களையும் வென்றுக்கொடுத்த சாதனை அணித்தலைவராக பார்க்கப்படும் டோனி, இறுதியாக இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் நியூஸிலாந்து அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் விளையாடினார்.

இதன்பிறகு அவர் எவ்வித போட்டிகளிலும் விளையாடவில்லை. ஆனால் ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த ஐ.பி.எல். ரி-20 தொடரில் விளையாடவிருந்தார். ஆனால் தற்போது இத்தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் டோனியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.