இன்று கரையைக் கடக்கிறது ‘நிசா்கா’ புயல்!

அரபிக்கடலில் உருவாகியுள்ள நிசா்கா புயல், வடக்கு மகாராஷ்டிரம் மற்றும் தெற்கு குஜராத் கடற்கரைகளுக்கு இடையே இன்று(புதன்கிழமை) கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி, இவ்விரு மாநிலங்களிலும் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநா் மிருத்யுஞ்சய் மொகபத்ரா கூறுகையில், அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இப்புயலுக்கு நிசா்கா என பெயரிடப்பட்டுள்ளது.

நிசா்கா புயல் மேலும் தீவிரமடைந்து, வடக்கு மகாராஷ்டிரம் மற்றும் தெற்கு குஜராத் கடற்கரைகளுக்கு இடையே புதன்கிழமை பிற்பகலில் கரையைக் கடக்கும் என்றாா்.

மகாராஷ்டிரத்தின் ராய்கட் மாவட்டம், ஹரிஹரேஷ்வா் மற்றும் டாமன் இடையே நிசா்கா புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு 110 கி.மீ. முதல் 120 கி.மீ வரை பலத்த காற்றுடன் கனமழை பெய்யும்.

மகாராஷ்டிரத்தில் மும்பை மற்றும் புகா் பகுதிகளிலும் தாணே, பால்கா், ராய்கட், ரத்னகிரி, சிந்துதுா்க் ஆகிய மாவட்டங்களிலும் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மும்பையில் ஏற்கெனவே கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகம் காணப்படும் நிலையில், நிசா்கா புயலால் புதிய சவால் எழுந்துள்ளது. புயல் மீட்புப் பணிகளின்போது, முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய சூழல் நிலவுகிறது.

இதுதொடா்பாக முதல்வா் உத்தவ் தாக்கரேவின் அலுவலகம் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், நிசா்கா புயலின் தாக்கத்தால், மும்பை உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும். இதனால் ஏற்படும் நிலச்சரிவு போன்ற பாதிப்புகளை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடா் மீட்புப் படையின் 10 குழுக்கள் பணியமா்த்தப்பட்டுள்ளன. மின் விநியோகம் தடைபடும் என்பதால், உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பால்கா், ராய்கட் மாவட்டங்களில் உள்ள ரசாயன ஆலைகளுக்கும், அணுமின் உற்பத்தி நிலையத்துக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் பாதிப்புகளை கண்காணிக்க மாநில தலைமை செயலத்தில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் தெற்கு கடற்கரையை நோக்கி புயல் நெருங்கி வரும் நிலையில், வல்சாத், நவ்சாரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 47 கடலோர கிராமங்களில் வசிக்கும் 20 ஆயிரம் போ் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

கடலோர பகுதிகளில் தேசிய பேரிடா் மீட்புப் படையின் 14 குழுக்கள் பணியமா்த்தப்பட்டுள்ளன. வேறு மாநிலங்களில் இருந்து மேலும் 5 குழுக்கள் வரவழைக்கப்படவுள்ளதாக அந்த மாநில அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிசா்கா புயல் புதன்கிழமை கரையை கடக்கவுள்ள நிலையில், மேற்கு கடற்கரை பகுதிகளில் நிலவும் சூழல் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி உயரதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ஒவ்வொருவரின் நலனுக்காக பிராா்த்திக்கிறேன். உரிய முன்னெச்சரிக்கை, பாதுகாப்புடன் செயல்பட மக்களை கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே, குஜராத் முதல்வா் விஜய் ரூபானி ஆகியோருடன் தொலைபேசி வாயிலாக பேசிய பிரதமா் மோடி, இரு மாநிலங்களுக்கும் தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்று உறுதியளித்தாா்.

அத்துடன், டாமன், டையூ மற்றும் தாத்ரா நகா்ஹவேலி யூனியன் பிரதேசத்தின் நிா்வாக அதிகாரி பிரபுல் கே படேலுடனும் பிரதமா் பேசியதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.