”நாமே தீர்வு” எனும் தன்னார்வலர்கள் திட்டத்தை ஆரம்பித்தார் கமல்ஹாசன்!

கொரோனா வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மக்கள் நீதி மையத்தின் ஸ்தாபகர் கமல்ஹாசன் ‘நாமே தீர்வு’ எனும் தன்னார்வலர்கள் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

குறித்த திட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், “இன்று உலக சுற்றுச் சூழல் தினம். உலகத்தைப் பசுமையாக மாற்றப் பல வருடங்களாகப் போராடிக்கொண்டிருக்கும் நாம், இன்று நம் சென்னையையும் வேறு ஒரு பச்சைக்கு மாற்ற வேண்டியுள்ளது.

கொரோனாவுக்கு எதிராக  இன்று நடக்கும் போரில் என்ன செய்வார்கள் என்று காத்திருந்தும், ஏதாவது செய்வார்கள் என்று பார்த்திருந்தும் களைத்தவர்களின், நாமாவது ஏதாவது செய்ய வேண்டும் என்ற சிந்தனை தான் நாமே தீர்வு.

இந்த நோயின் தீவிரத்தை மருத்துவர்கள் கட்டுப்படுத்தும் நேரத்தில், எளிய மக்கள் பசி நோயினால் பாதிக்கப்படக் கூடாது என தெருவோரம் இருப்பவருக்கு உணவளித்ததில் தொடங்கி, தேடி தேடி உதவி செய்தவர்கள் எல்லாம், நாமே தீர்வு என்று நம்பித்தான் இலட்சக்கணக்கானோர் செய்தனர். செய்தும் வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது.

இந்நிலையில் “நாமே தீர்வு” எனும் தன்னார்வலர் திட்டம் நடிகர் கமல்ஹாசனால் தொடங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.