கொரோனா வைரஸ் : ஒரேநாளில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் பதிவு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது.  இந்நிலையில் நேற்று அதி உச்ச பட்ச எண்ணிக்கையாக ஒரே நாளில் 9 ஆயிரத்து 889 பேர் புதிதாக வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்காரணமாக மொத்தமாக வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 26 ஆயிரத்து 713 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் 275 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 363 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்போது வரையில் 1 இலட்சத்து 8ஆயிரத்து 450 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதுடன் 1 இலட்சத்து 11 ஆயிரத்து 900 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு சிகிச்சைப்பெற்று வருபவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழகத்தில் நேற்று (வியாழக்கிழமை) புதிதாக 1384 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து தமிழகத்தில் மொத்தமாக 27 ஆயிரத்து 256 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.  அத்துடன் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 220 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் வைரஸ் தொற்றினால் ஒரேநாளில் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 5ஆவது நாளாக ஆயிரத்தை கடந்துள்ளது. இதன்காரணமாக சிறிது அச்சநிலை நிலவுகின்றது.

இந்நிலையில் நேற்றைய தினம் 16 ஆயிரத்து 447 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு தமிழக அரசு எவ்வாறான நடைமுறைகளை பின்பற்றுகிறது என்பது குறித்து ஆய்வுகளை மேற்கொள்வதற்காக மத்திய ஆய்வுக்குழு இன்று சென்னை வருகைத்தரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.