கொரோனா தொற்று சிகிச்சை – பி.சி.ஆர் பரிசோதனைக்கான கட்டண விபரம் வெளியீடு

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கான கட்டணம் மற்றும் பி.சி.ஆர்.பரிசோதனைக்கான கட்டண விபரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில், கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக வந்த குற்றச்சாட்டுகளை அடுத்து  சுகாதாரத்துறை அதிகாரிகளின் பரிந்துரைகளை ஏற்று சிகிச்சைக்கான கட்டணத்தை அரசே நிர்ணயித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகள் ஏ1 முதல் ஏ6 என 6 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும்  அதன்படி முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா தொற்று லேசான அறிகுறியுடன் ஏ1 முதல் ஏ6 வகை மருத்துவமனைகளில், பொதுஅறையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு 5000 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் காப்பீட்டு திட்டம் அல்லாத பொது மக்களுக்கு ஏ1 மற்றும் ஏ2 வகை மருத்துவமனைகளில் பொது அறையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு 7500 ரூபாயும், ஏ3 முதல் ஏ6 வரையிலான மருத்துவமனைகளில் நாள் ஒன்றுக்கு 5000 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சை பிரிவில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏ1 மற்றும் ஏ2 வகை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு 11ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாயும், ஏ3 முதல் ஏ6 வகையிலான மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் முதல் 13 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் அல்லாத பொது மக்களுக்கு ஏ1 முதல் ஏ6 வகையிலான மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பி.சி.ஆர்.பரிசோதனைக்கான கட்டணத்தை பொறுத்தவரை முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் பரிசோதனை செய்பவர்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாயும்,காப்பீட்டு திட்டம் அல்லாத பொது மக்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்கு சென்று பரிசோதனை செய்யும்பட்சத்தில் கூடுதலாக 500 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர லேசான அறிகுறி உள்ள நோயாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் 25 வீத படுக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும் எனவும், இதனை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.