இந்தியாவில் 75 நாட்களுக்குப் பின்னர் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், 75 நாட்களுக்கு பின்னர் இந்தியாவில் வழிப்பாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச் 25ஆம் திகதியில் இருந்து அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. பூஜை மட்டும் நடத்த அனுமதிக்கப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில், 5ஆம் கட்ட ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதற்கமைய இன்று (திங்கட்கிழமை) முதல்,  வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. அத்தோடு, வழிபாட்டுத் தலங்களில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு வெளியிட்டது.

எனினும்  முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே வழங்கப்பட்டது. அதன்படி, 75 நாட்களுக்குப் பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டன.

இதனையடுத்து கோயில்கள், பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்களில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வழிபாடு செய்து வருகின்றனர்.

வழிபாட்டுத் தலங்களில் வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலை- திருப்பதி வெங்கடேசபெருமாள் கோயில் இன்று வழிபாட்டுக்காகத் திறக்கப்பட்டது.  11ஆம் திகதி முதல் ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் பொது தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

இதேபோல் புதுச்சேரியிலும் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டன. புதுவை மணக்குள விநாயகர் கோயில், உலகப் புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில், காரைக்கால் பள்ளிவாசல் என முக்கிய வழிபாட்டுத் தலங்களில் இன்று பக்தர்கள் தனி மனித இடைவெளியுடன் வழிபாடு நடத்திவருகின்றனர்.

இதேபோல் கேரள மாநிலத்தில் உள்ள கோயில்கள் அனைத்தும் நாளை திறக்கப்படுகின்றன. மாதம் 5 நாட்கள் திறக்கப்படும் சபரிமலை அய்யப்பன் கோயில் எதிர்வரும் 14ஆம் திகதி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டு குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.

அதேநேரம் தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களை திறப்பதற்கான தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸினால் இந்தியாவில் இதுவரையில், 257,486 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இதுவரையில் 7207 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.