மருத்துவ உபகரண கொள்வனவுக்கான நிதி குறித்து பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் மீண்டும் வலியுறுத்து

மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்யவும் மேம்படுத்தவும் 3,000 கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இரண்டாவது நாளாக மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நேற்று (புதன்கிழமை) ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில், அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.

மேலும், தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகளையும் அவர் முன்வைத்தார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் உபகரணங்களை கொள்வனவு செய்யவும் மேம்படுத்தவும் 3,000 கோடி ரூபாய்  நிதியுதவி வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் முன்னைய கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியின் இரண்டாவது தவணையை வழங்க வேண்டும் என்றும் மார்ச் மாதத்திற்கான ஜி.எஸ்.டி. நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.

நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளூட்சிகளுக்கான 2020-21ம் ஆண்டுக்கான நிதிக்குழு தொகையில் 50% தற்போது வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட முதலமைச்சர், மாநிலங்களுக்கான கடன் உச்சவரம்பை ரிசர்வ் வங்கி 60% உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கொரோனா தொற்றை எதிர்த்து போராட தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1,000 கோடியை விரைவாக ஒதுக்க வேண்டும் என்றும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக வழங்குவதற்கு ஏற்ப கூடுதல் உணவு தானியங்களையும் பருப்பையும் வழங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

நிதி நெருக்கடியில் உள்ள மின்சார துறையை அதில் இருந்து மீட்க நிதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்திய முதலமைச்சர், மின்சாரத் துறையில் கொண்டு வர உள்ள சீர்திருத்த நடவடிக்கைகளை இரத்து செய்ய வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.