அயல்நாடுகளில் சிக்கித் தவிக்கின்ற தமிழர்களை மீட்டு வரக் கோரி வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்…

அயல்நாடுகளில் சிக்கித் தவிக்கின்ற தமிழர்களை, உடனடியாகத் தமிழகம் மீட்டுக்
கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, மறுமலர்ச்சி திராவிட
முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், சென்னை
அண்ணா நகரில் உள்ள அவரது இல்லம் முன்பு இன்று (05.07.2020) காலை பத்து
மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கை முழக்கங்களை வைகோ எழுப்பினார். மறுமலர்ச்சி தி.மு.க. மாவட்டச்
செயலாளர்கள் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், ஜீவன், கழக குமார், சைதை சுப்பிரமணி
உள்ளிட்ட 40 தோழர்கள் உடன் பங்கேற்று, முழக்கங்களை எழுப்பினர்.
அதன்பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய பொதுச்செயலாளர் வைகோ குறிப்பிட்டதாவது.
கொரோனா தாக்குதலால், வளைகுடா நாடுகளில் உள்ள தமிழகத் தொழிலாளர்கள்
பல்லாயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்புகளை இழந்து விட்டார்கள். அன்றாட
உணவுக்கு வழி இன்றித் தவிக்கின்றார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும்
மருத்துவமனைகளில் இடம் கிடைப்பது இல்லை. ஏற்கனவே வசிக்கின்ற அறைகளில் பல
தோழர்களுடன் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. அவர்களது நிலையை
எண்ணி, தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள்
வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
தங்கள் சொந்தச் செலவில் ஏற்பாடு செய்து, புறப்பட்டு வர இருந்த வான் ஊர்திகளையும்,
கடைசி நேரத்தில் இந்திய அரசு நிறுத்திவிட்டது.
கேரள அரசு, தங்கள் மாநிலத்தவரை மீட்டு வருகின்ற பணிகளை வெற்றிகரமாகச் செய்து
வருகின்றது. அதேபோல், பல மாநில அரசுகளும் இயங்கி வருகின்றன. ஆனால், தமிழக
அரசு வான் ஊர்திகள் வந்து இறங்குவதற்கு ஒப்புதல் தரவில்லை. வந்தே பாரத்
திட்டத்தின் கீழ், தமிழகத்திற்குப் போதுமான வான் ஊர்திகளை நடுவண் அரசு
அறிவிக்கவில்லை. எனவே, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து இந்த
ஆர்ப்பாட்டத்தை, நடத்துகின்றோம்.
அயல்நாடு வாழ் தமிழர்களின் நலன்களைப் பேணுவதற்காக, தமிழக அரசு ஒரு புதிய
துறையை உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்