வவுனியா வடக்கு எல்லையோர கிராமமான தனிக்கல்லு பகுதியில் பயிற்செய்கையில் ஈடுபட இராணுவம் அனுமதி மறுப்பு…
வவுனியா வடக்கின் எல்லையோர கிராமமான தனிக்கல்லு பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட இராணுவத்தினர் அனுமதி மறுப்பதாக அப் பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா வடக்கின் எல்லையோர கிராமமாக தனிக்கல்லு கிராமம் காணப்படுகின்றது. இப் பகுதியில் 250 ஏக்கர் காணிகள் பட்டிக்குடியிருப்பு மற்றும் அதனையண்டிய கிராமங்களைச் சேர்ந்த தமிழ் மக்களுக்கு விவசாய நடவடிக்கைக்காக வழங்கப்பட்டிருந்தன. யுத்தம் முடிவடைந்து அப்பகுதி மக்கள மீள்குடியேறிய போது அப்பகுதி விவசாய நிலங்கள் அருகில் உள்ள சிலோன் ரியட்டர், வெலிஓயா, டொலர் பாம் ஆகிய கிராமங்களில் குடியேற்றப்பட்ட பெரும்பான்மை இனத்தவரால் செய்கை பண்ணப்பட்டது.
மக்கள் பலத்த போராட்டங்களுக்கு மத்தியில் அதனை மீட்டு அருகில் இருக்கும் சிங்கள குடியேற்றவாசிகள் மற்றும் இராணுவத்தினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் விவசாயம் செய்து வந்தனர். இம் மக்களுக்கான விவசாய நடவடிக்கைக்காக தனிக்கல்லு குளமும் புனரமைத்து கொடுக்கப்பட்டது.
ஆனால், தற்போது அப்பகுதியில் பயிற் செய்கையில் ஈடுபட மக்கள் செல்கின்ற போது இராணுவத்தினர் குறித்த வயற் காணிகளுக்குள் மக்களை செல்ல விடாது வீதிகளில் நின்று திருப்பி அனுப்புவதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக குறித்த தனிக்கல்லு கிராமத்தையும் பெரும்பான்மையினத்தவர்கள் கையகப்படுத்த முயல்வதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை