இரட்டை வேடம் போடும் வேடதாரிகளை வாக்களிப்பு மூலம் நாம் விரட்டியடிக்க வேண்டும் – அரவிந்தகுமார் தெரிவிப்பு…
(க.கிஷாந்தன்)
ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலானது தமிழ் பேசும் மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகின்ற தேர்தலாகும். எமது இருப்பும் இத்தேர்தல்மூலமே தீர்மானிக்கப்படும். எனவே, ஓரணியில் திரண்டு ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்குமாறு கோருகின்றேன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர் அரவிந்தகுமார் தெரிவித்தார்.
பதுளை லுணுகலை பிரதேசத்தில் 30.07.2020 அன்று மாலை இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” நாட்டில் தற்போது இனவாதம் தலைவிரித்தாடுகின்றது. தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் அவசியமில்லை என ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். சிறுபான்மையின மக்களின் ஆதரவு இல்லாமல் ஆட்சியமைப்போம் என வெளிப்படையாக கூறிவருகின்றனர். எனவே, தமிழ் பேசும் மக்கள் ஓரணியில் திரண்டு பதிலடிகொடுக்கவேண்டும்.
இலங்கை அரசியல் வரலாற்றிலேயே சிறுபான்மையின மக்களின் வாக்குகள் தமக்கு தேவையில்லை என முதன்மையாக வெளிப்படையாகக் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குகளை பெறுவதற்காகவே சிங்கள மக்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் இனவாதம் பரப்பிவருகின்றனர். எனினும், பெரும்பான்மையின மக்கள் சிந்தித்து செயற்படுவார்கள் என நம்புகின்றேன்.
தமிழ், முஸ்லிம் வாக்குகள் தேவையில்லை என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வெளிப்படையாக கூறிவந்தாலும், தமிழ் வாக்குகளுக்காக தோட்டப்பகுதிகளுக்கு வருகின்றனர். எமது வாக்குகளை கொள்ளையடிப்பதற்கு முயற்சிக்கின்றனர். இவ்வறு இரட்டைவேடம் போடும் வேடதாரிகளை வாக்களிப்புமூலம் நாம் விரட்டியடிக்கவேண்டும்.
தமிழ் வாக்குகளை சிதறடிப்பதற்காக சில சுயேட்சைகள் போட்டியிடுகின்றன. சுயேட்சையாக போட்டியிடுபவர்களின் உள்நோக்கத்தை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். கடந்த நான்கரை வருடங்களில் மனசாட்சிக்கு விரோதமின்றி மக்கள் சேவை களை செய்துள்ளோம்.” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை