வாழை பயிரிட்டோரைக் குப்புறத் தள்ளிய கொரோனா ஊரடங்கு விலை கிடைக்காது போனதற்கு இழப்பீடு ஏக்கருக்கு50,000 ரூபாய் வழங்க வேண்டும்…

வாழை பயிரிட்டோரைக் குப்புறத் தள்ளிய கொரோனா ஊரடங்கு!
விலை கிடைக்காது போனதற்கு இழப்பீடு ஏக்கருக்கு 50,000 ரூபாய் வழங்க வேண்டும்; வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசைக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட  மலைக் கிராமமான இராமாபுரம் மற்றும் கடலூர் வட்டப் பகுதிகள், அதைச் சுற்றிலுமுள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் முக்கனிகளில் ஒன்றான வாழை பயிரிடப்பட்டு வருகின்றது. பூவன், ஏலக்கி, செவ்வாழை, கற்பூரவல்லி, ரஸ்தாளி, நேந்திரன், நாடு, சக்கை ரக வாழைகள் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில், ஆடி மாத பருவத்தில் பயிரிடப்படுகின்றன.
கெடுவாய்ப்பாக, கொரோனா ஊரடங்கு தொடங்கிய நேரம் பார்த்து வாழைத்தார் அறுவடை செய்ய வேண்டியதும் தொடங்கியது. அப்படி கடந்த நான்கு மாதங்களாக வாழைத்தார் அறுவடை நடந்து வருகிறது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக, வாழைத்தார் வாங்க வரும் வியாபாரிகளின் வருகை அடியோடு நின்றுவிட்டது. தப்பித் தவறி அரிதாக வரும் வியாபாரியோ வாழைத்தாரை அடிமாட்டு விலைக்குக் கேட்கின்றார்.
கடந்த ஆண்டு வாழைத்தார் ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனையானது.  ஏலக்கி போன்ற உயர் ரக வாழை கடந்த ஆண்டு கிலோ 60 ரூபாய் வரை விற்பனையானது; ஆனால் இந்த ஆண்டோ அதை கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரைக்கே கேட்கிறார்கள். பூவன் வாழையையைப் பொறுத்தவரை, தாரே ரூ.70 முதல் ரூ.90 வரைதான் கேட்கப்படுகிறது.

வாழைத்தார் வாங்க வியாபாரிகள் வராததால், வாழைத்தார் மரத்திலேயே பழுத்து வீணாகும் நிலை பெருமளவில் ஏற்பட்டிருக்கிறது.
உற்பத்திச் செலவு என்று பார்த்தால். ஒரு வாழைத்தாரை விளைவிக்க ரூ.150 முதல் ரூ.200 வரை செலவாகிறது. சூறாவளிக் காற்றிலிருந்து வாழையைப் பாதுகாக்க சவுக்குக் கழி கட்ட வேண்டும். ஒரு சவுக்குக் கழியே 50 ரூபாய் வரை ஆகிறது. ஒரு ஏக்கருக்கு பயிர்ச் செலவு ரூபாய் ஒன்றரை லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை ஆகிறது. இவ்வளவு செலவு செய்தும் ஏக்கருக்கு ரூபாய் 70 ஆயிரத்திற்குக் கூட வாங்குவார் இல்லை.
வாழைத்தார் மும்பை, ஆந்திரா, கேரளா, பெங்களூரு போன்ற வெளி மாநிலங்களுக்கு அதிகப்படியாக ஏற்றுமதியாகும். தமிழகத்தில் சென்னை கோயம்பேட்டுக்கும் சென்னைப் பெருநகருக்கும் ஒருசில இதர மாவட்டங்களுக்கும் வாழைத்தார் அனுப்பப்படும். இவை அனைத்தும் நின்றுபோனதால் வாழை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வாழை விவசாயிகள் ஒன்றும் குபேரர்கள் இல்லை. தேசிய வங்கி, கூட்டுறவு வங்கி மற்றும் வட்டிக்கு விடும் தனிநபடம் கடன் வாங்கித்தான் வாழை பயிரிடுகின்றனர். தற்போது கடனைக் கட்ட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது மட்டுமல்ல; தங்களின் வாழ்வாதாரத்தைக் கூட கவனிக்க முடியாத நிலைக்கே தள்ளப்பட்டுள்ளனர் வாழை விவசாயிகள்.
வாழை பயிரிட்டோரைக் குப்புறத் தள்ளியுள்ளது கொரோனா ஊரடங்கு! எனவே விலை கிடைக்காது போனதற்கு இழப்பீடாக ஏக்கருக்கு 50,000 ரூபாய் வழங்க வேண்டும்; வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசைக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.