சென்னை உயர்நீதிமன்ற மூத்த செய்தியாளர் பி.எஸ்.எல்.பிரசாத் மறைவு வைகோ இரங்கல்…

சென்னை உயர் நீதிமன்ற மூத்த செய்தியாளர் பி.எஸ்.எல்.பிரசாத் உடல் நலக்குறைவால் நேற்று இரவு
காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அவருக்கு வயது 65.
மக்கள்குரல், ஈநாடு உள்ளிட்ட நாளிதழ்களில் பணியாற்றிய பிரசாத், தற்போது பி.டி.ஐ. செய்தி
நிறுவனத்தில் மூத்த செய்தியாளராகப் பணியாற்றி வந்தார்.

1970-களில் வடசென்னை பகுதி நிருபராக தன் பணியை தொடங்கியவர், பின்னர் சென்னை காவல்
ஆணையாளர் அலுவலகம், சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட துறைகள் சார்ந்த செய்தி சேகரிக்கும்
நிருபராக, நேர்த்தியாக செய்தி சேகரிப்பு பணியைச் செய்துவந்தார்.
சுமார் 40 ஆண்டுகால செய்தியாளர் பணியில், 23 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை உயர் நீதிமன்றத்தில்
செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

மூவர் தூக்கு வழக்கு, ஸ்டெர்லைட் வழக்கு, சீமைக் கருவேல வழக்கு, கொரோனா ஊரடங்கு காலத்தில்
அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு உதவிகள் வழங்கக் கோரிய வழக்கு
உள்ளிட்டவற்றில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் வாதாடச் சென்றபோது மிகவும் ஆர்வத்தோடு
செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபடுவதை நான் பார்த்திருக்கிறேன்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட இவர், ராஜீவ்காந்தி அரசு
பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு அவரது உடல் நிலை மிகவும்
பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும், பத்திரிகைத் துறை நண்பர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட
முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.