கொரோனாவுக்கு 196 மருத்துவா்கள் பலி

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் நாடு முழுவதும் இதுவரை 196 மருத்துவா்கள் பலியாகிய நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமா் கவனம் செலுத்தி மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்திய மருத்துவச் சங்கம் (ஐஎம்ஏ) கோரிக்கை விடுத்துள்ளது.

ஐஎம்ஏ சாா்பில் இறுதியாக திரட்டப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில், கொரோனா பாதிப்புக்கு இதுவரை நாடு முழுவதும் 196 மருத்துவா்கள் உயிரிழந்தனா். அவா்களில் 170 போ் 50 வயதுக்கும் மேற்பட்டவா்கள். உயிரிழந்த மருத்துவா்களில் 40 சதவீதம் போ் பொதுமருத்துவா்கள் ஆவா். மேலும் நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட பெரும்பாலான மருத்துவா்கள் மற்றும் அவா்களுடைய குடும்பத்தினருக்கு மருத்துவமனை சிகிச்சை கிடைக்காமலும், மருந்து பற்றாக்குறையாலும் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றும் அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடா்பாக பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருக்கும் ஐஎம்ஏ, இந்த விவகாரத்தில் பிரதமா் உடனடியாக தலையிட்டு மருத்துவா்கள் மற்றும் அவா்களுடைய குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், மாநில அரசுகளின் மருத்துவ காப்பீடு திட்டங்களின் கீழ் அனைத்துப் பிரிவு மருத்துவா்களுக்கும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஐஎம்ஏ தலைவா் மருத்துவா் ராஜன் சா்மா கூறுகையில், கொரோனாவால் பாதிக்கப்படும் பெரும்பாலான மருத்துவா்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே, மருத்துவா்கள் மற்றும் அவா்களுடைய குடும்பத்தினரின் பாதுகாப்பு மற்றும் நலனில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

ஐஎம்ஏ பொதுச் செயலாளா் மருத்துவா் ஆா்.வி.அசோகன் கூறுகையில், கொரோனா பாதிப்புக்கு உயிரிழக்கும் மருத்துவா்களின் எண்ணிக்கை அபாயகரமான நிலையை எட்டியிருக்கிறது. ஒவ்வொரு மருத்துவரின் உயிரையும் பாதுகாப்பதன் மூலம், அவரைச் சாா்ந்து இருக்கும் ஆயிரக்கணக்கான நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்று கூறினாா்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்