13ஆவது திருத்தச்சட்டம் நீக்க வேண்டும் என்ற கருத்தை ஏற்க முடியாது

(க.கிஷாந்தன்)

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற ஆளுங்கட்சி உறுப்பினர்களின் கருத்தை ஏற்கமுடியாது. 13 முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலைப்பாடாகும் என்று கூட்டணியின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் 25.08.2020 அன்று மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” இலங்கை, இந்தியா ஆகிய இரு நாடுகளின் இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இலங்கையில் மாகாணசபை முறைமையை உருவாக்குவதற்காக 13ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. எனவே, இதுவிடயத்தில் இலங்கையில் தன்னிச்சையாக செயற்படமுடியாது. குறிப்பாக இந்தியாவை பகைத்துக்கொண்டு இதனை நீக்கினால் நெருக்கடிகள் ஏற்படக்கூடும்.

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கும்போது 13 பிளஸ் எனக்கூறினார். இன்றுகூட அவரோ அல்லது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவோ 13 ஐ நீக்குவது தொடர்பில் கருத்து வெளியிடவில்லை. தமது வாக்கு வங்கியை அதிகரித்துக்கொள்வதற்காகவே 13 நீக்கப்படவேண்டும் என சிலர் வலியுறுத்திவருகின்றனர். இதற்கு நாம் இடமளிக்கமாட்டோம்.

வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல நாட்டில் ஏனைய 7 மாகாணங்களிலும் மாகாண சபைகள் இயங்கின. முதல்வர்கள் தெரிவானார்கள். எனவே, மாகாணசபை முறைமையை பலப்படுத்தவேண்டுமே தவிர அதனை பலவீனப்படுத்தக்கூடாது. எவ்வித அதிகார குறைப்பும் இன்றி 13 முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலைப்பாடாகும்.

தமிழ் முற்போக்கு கூட்டணியில் மூன்று கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இம்மூன்று கட்சிகளும் இணைந்து பயணித்தாலேயே எமக்கான பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக்கொள்ளக்கூடியதாக இருந்து. எனவே, வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் கட்சிகளும் இணைந்து செயற்படவேண்டும்.” – என்றார்.

Attachments area

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.