எரியும் கப்பலில் இருந்த பணியாளர் ஒருவர் பலி – 22 பேர் மீட்பு; எண்ணெய் கடலில் கலப்பதைத் தடுக்கக் கடும் முயற்சி (photos)

அம்பாறை, சங்கமன்கண்டி கடற்பகுதியில் தீ விபத்துக்குள்ளான எண்ணெய்க் கப்பலில் இருந்து, காணாமல்போயிருந்தவர் உயிரிழந்துள்ளார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சங்கமன்கண்டியிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் MT New Diamond என்ற கப்பலில் நேற்றுக் காலை தீ பரவியிருந்தது.

பனாமாவுக்குச் சொந்தமான குறித்த கப்பல் குவைத்திலிருந்து இந்தியாவுக்கு எண்ணெய் ஏற்றிக்கொண்டு சென்றபோதே தீ விபத்துக்குள்ளாகியுள்ளது.

இலங்கைக் கடற்படையிரால் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகள் நேற்று முதல் தொடர்கின்றன.

இலங்கைக் கடற்படையினரின் உதவிக்கு இந்தியக் கடற்படையினரும் வந்துள்ளனர்.

கப்பலில் இருந்த மாலுமி உட்பட 22 பேர் மீட்கப்பட்டுள்ளனர். பணியாளர் ஒருவர் காணாமல்போயிருந்த நிலையில் அவர் உயிரிழந்துவிட்டார் என்று இன்று காலை தெரியவந்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

தீக்காயங்களுடன் நேற்று மீட்கப்பட்ட மாலுமி கல்முனை ஆதார வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். ஏனைய 21 பணியாளர்களும் உரிய சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பாதுகாப்பாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

இந்தக் கப்பலில் 2 இலட்சத்து70 ஆயிரம் மெட்ரிக்தொன் மசகு எண்ணெய் இருப்பதால், அது கடலில் கலக்குமாக இருந்தால் அது கடல் பாதுகாப்புக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என சூழலியலாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதனால் எண்ணெய் கடலில் கலப்பதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை சமுத்திரவியல் பாதுகாப்பு அதிகார சபை முன்னெடுத்துள்ளது.

தற்போது அந்தக் கப்பலில் அனைத்து இயந்திரங்களும் செயலிழந்துள்ளதால், கப்பல் இலங்கைப் பக்கமாக மிதந்து வருகின்றது எனக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அது கரைக்கு வருமாக இருந்தால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால் அது கரைக்கு வருவதைத் தடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்