சிறப்புத் தூதுவர் மூலம் ’13’ ஐ கையாள இந்திய அரசு முயற்சி!!!!

இலங்கையின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான புதிய அரசு புதிய அரசமைப்பை உருவாக்கவுள்ள நிலையில், அதில் மாகாண சபைகளின் நிலை குறித்து ஆராய்வதற்காக இந்தியாவுடன் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுகளை நடத்த ஆளும் தரப்பு தயாராகி வருகின்றது.

இந்தியாவின் சிறப்புத் தூதவர் ஒருவர் இந்த விடயங்களைக் கையாளவும் நியமிக்கப்படவுள்ளார் என்று இராஜதந்திர வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.

தற்போது நடைமுறையில் உள்ள 1978ஆம் ஆண்டு அரசமைப்பு 19 தடவைகள் திருத்தப்பட்டுள்ள நிலையில், 20ஆவது  திருத்தமும் ஒரு சில வாரங்களில் கொண்டுவரப்படவுள்ளது.

இதற்காக குறுகிய கால மாற்றங்கள் மற்றும் நீண்டகால மாற்றங்கள் என்ற அடிப்படையில் அரசமைப்பு வரைபுகளைக் கொண்டுவருவதற்காக உரிய நிபுணர் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் மாகாண சபைகளுக்கு ஆதாரமாகவுள்ள 13ஆவது திருத்தச் சட்டம் குறித்து எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பான அரசின் நிலைப்பாடுகள் இன்னும் தெளிவாகவில்லை.

அரசிலுள்ள தமிழர் தரப்பினர் 13 ஆவது திருத்தச் சட்டம் அவசியம் எனக் கூறிக்கொண்டுள்ள போதிலும் அமைச்சரவையில் அங்கம் வகுக்கும் பெரும்பாலான சிங்கள அமைச்சர்கள் மாகாண சபை முறைமை அவசியமில்லை என்பதையே கூறி வருகின்றனர்.

இந்தநிலையில், 13ஆவது திருத்தம் குறித்து இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயுடன் ஆளும் தரப்பினர் நடத்திய பேச்சின்போது இது குறித்து சில இராஜதந்திர ரீதியிலான தீர்மானங்களை எடுக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 26 ஆம் திகதி இந்திய இல்லத்தில் இராப்போசன விருந்தில் கலந்துகொண்ட அமைச்சர்கள், இந்த விடயம் குறித்தும் இந்தியத் தூதுவருடன் பேசியுள்ளனர்.

13ஆவது திருத்தச் சட்டத்தில் அரசு கைவைக்க நினைக்கவில்லை எனவும், இது குறித்து தெளிவான நடைமுறைகளை அறியத்தருவதாகவும் இலங்கை தரப்பு வாக்குறுதியளித்துள்ளது என ஆளும் தரப்பின் அமைச்சர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.

இதனிடையே 13ஆவது திருத்தச் சட்டம் குறித்து இராஜதந்திர ரீதியில் பேச்சுகளை முன்னெடுக்க டில்லித் தலைமை இராஜதந்திரி ஒருவரை நியமிக்கத் தீர்மானித்துள்ளார் எனவும், அவர் இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்தின் சிறப்பு நிபுணராக இருக்கக்கூடும் எனவும் தெரியவருகின்றது.

இவ்வாறான இராஜதந்திர ரீதியிலான பேச்சுகளில் இலங்கை ஈடுபட அதிகளவில் வாய்ப்புகள் உள்ளன என்று ஆளும் தரப்பின் முக்கியஸ்தர்கள் சிலர் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்