தமிழினத் துரோகி முத்தையா முரளிதரனாக நடிப்பதை விஜய்சேதுபதி தவிர்த்துக் கொள்க: வைகோ அறிக்கை!!!

தமிழ் ஈழத்தில் இலட்சோப இலட்சம் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டு, ஈழப்போர் முடிவடைந்துவிட்டது என்று கொலைகாரன் ராஜபக்சே அறிவித்தபோது, இந்த நாள் ‘இனிய நாள்’ என்று கூறியவர் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்.
ஆயிரக்கணக்கான பிள்ளைகளைப் பறிகொடுத்துவிட்டு, காணாமல் போன எங்கள் இரத்த உறவுகளைத் தேடிக் கண்டுபிடித்துத் தாருங்கள் என்று தமிழ் ஈழத் தாய்மார்கள் பட்டினிப் போராட்டம் நடத்தியபோது, அதை நாடகம் என்று இகழ்ந்து பேசியவர்தான் முரளிதரன்.
பிறப்பால் தமிழனாகவும், வளர்ப்பால் சிங்களவன் எடுப்பார் கைப்பிள்ளையாகவும் மாறிப்போன முத்தையா முரளிதரன் வாழ்க்கையைத் திரைப்படமாக்க சிங்கள திரைப்பட தயாரிப்பு நிறுவனம் முயற்சி எடுத்து, அந்தப் படத்திற்கு ‘800’ என்று பெயர் சூட்டி இருக்கின்றது.
தமிழினத்தின் துரோகி என்று உலகத் தமிழர்களால் அடையாளம் காணப்பட்டுள்ள முத்தையா முரளிதரன் வாழ்க்கையைச் சித்தரிக்கும் 800 திரைப்படத்தில் முரளிதரனாக, தமிழ்நாட்டின் தலைசிறந்த திரைக் கலைஞர் என்ற பெயரை எடுத்துள்ள விஜய்சேதுபதி நடிக்கப் போகிறார் என்ற செய்தி தமிழர்தம் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டுகிறது.
ஒன்றரை இலட்சம் தமிழர்கள் இரத்தத் தடாகத்தில் மூழ்கடிக்கப்பட்டு, கொல்லப்பட்டபோது 90 ஆயிரம் தமிழ் பெண்கள் விதவைகளாகி கதறி அழுதபோது பரிகாசம் செய்த இனத் துரோகி முத்தையா முரளிதரனாக திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடித்தார் என்கிற தீராத அவப்பழிக்கு ஆளாகிவிடக்கூடாது. எனவே ‘800’ திரைப்படத்தில் நடிப்பதை நடிகர் விஜய்சேதுபதி தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்