மாக்கந்துரை மதுஷ் சுட்டுப் படுகொலை…

பொலிஸ் காவலில் இருந்த பிரபல பாதாள உலகக் கோஷ்டியின் முக்கிய புள்ளி மாக்கந்துரை மதுஷ் இன்று அதிகாலை சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மாளிகாவத்தை தொடர்மாடி வீட்டுத் திட்டப் பகுதியில் பொலிஸார் மற்றும் பாதாள உலகக் கோஷ்டியின் புள்ளிகளுக்கு இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு மோதலிலேயே அவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் பொலிஸார் இருவரும் காயமடைந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட பகுதியில் பெருமளவு போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்று கிடைத்த தகவலையடுத்துப் பொலிஸார் தமது பாதுகாப்பில் இருந்த மதுஷை அழைத்துக்கொண்டு அங்கு சென்றிருந்தார்கள். அப்போதே அங்கு நின்ற பாதாள உலகக் கோஷ்டியின் புள்ளிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் துப்பாக்கிச் சமர் இடம்பெற்றுள்ளது எனவும் அவர் கூறினார்.

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பொலிஸாரால் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது 22 கோடி ரூபா மதிப்புள்ள 22 கிலோ ஹெராயின், 2 கைத்துப்பாக்கிகள் மற்றும் பாதாள உலகக் கோஷ்டியினருக்குச் சொந்தமான ஒரு மோட்டார் சைக்கிள் என்பன மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

மாக்கந்துரை மதுஷ் டுபாயில் வைத்துக் கைதுசெய்யப்பட்ட பின்னர் கடந்த வருடம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார். அதன்பின்னர் அவர் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்