கிளிநொச்சி மாவட்ட கொரோனா பாதுகாப்பு செயலணியின் விசேட கலந்துரையாடல்…

கிளிநொச்சி மாவட்ட கொரோனா பாதுகாப்பு செயலணியின் விசேட கலந்துரையாடல். மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் மாவட்டச்செயலக அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் சுகாதாரத்திணைக்கள அதிகாரிகள் பொலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் கொரோனா தொற்றுடன் நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் பாதுகாப்பு தொடர்பில் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்களுடன் ஏற்கனவே சுகாதார திணைக்கள அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கமைய முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பாதுகாப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பிலும் பல விடயங்கள்; ஆராயப்பட்டன.
கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரையில் இதுவரையில் 487 பேர் அதாவது 90 குடும்பங்களை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தபட்டுள்ளனர்.இவர்களுக்கான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் சமூக மட்டத்தில் 1157 பேருக்கு எழுமாறான PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்ட பொது வைத்தியசாலையில் 217 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன அத்தோடு கிளிநொச்சி மாவட்டத்தினை சாராத கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்களில் 553 பேருக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இவர்களில் 27 பேருக்கு தொற்றானது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அத்தோடு சிறுவர் இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளில் தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை எனவும் சுகாதார திணைக்கள அதிகாரிகள் தகவல் வெளியிட்டிருந்தனர்.
இத்தகைய சூழலில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவர் இனங்காணப்பட்டுள்ள நிலைமையில் தொற்றினை பரவாது கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்கும் வகையில் கலந்துரையாடலானது இடம்பெற்றிருந்தது.

பொதுமக்கள் அதிகமாக கூடுவதனை தடுப்பதற்கும் முககவசம் அணிந்து செல்வதனை உறுதிப்படுத்துவதற்கும் மற்றும் நிறுவனங்களிலே சுத்திகரிப்பு உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்திக்கொள்வதற்குமான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. அத்தோடு பொதுச்சந்தை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக சேவை பெறுகின்ற இடங்களினை நாளாந்தம் தொற்று நீக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதற்கு அமைய பிரதேச சபையின் ஊடாக அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் மக்களுக்கான விழிப்புனர்வு செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.