நெய்வேலி காவல் நிலையத்தில், செல்வமுருகன் அடித்துக் கொலை; காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். வைகோ அறிக்கை…

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் காடாம்புலியூர் செல்வமுருகன், முந்திரி வணிகம் செய்து
வருகின்றார். அக்டோபர் 28 அன்று காலையில், வடலூர் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர்
வீடு திரும்பவில்லை. அவரது மனைவி பிரேமா, அலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர்
எடுக்கவில்லை. எனவே பிரேமா, வடலூருக்கு வந்து தேடிப்பார்த்துவிட்டு, காவல் நிலையம்
சென்று, புகார் கொடுத்தார். ஆனால், அவர்கள் வாங்கவில்லை; நெய்வேலி காவல் நிலையத்தில்
புகார் கொடுக்குமாறு கூறினார்கள்.

இரவு 8 மணி அளவில் பிரேமா அங்கே சென்றபோது, அவர்கள் மறுநாள் காலையில் வருமாறு
கூறினார்கள். அப்போது, பிரேமாவையும், அவரது குழந்தைகளையும் காவலர்கள் அலைபேசியில்
படம் பிடித்துக் கொண்டார்கள். அங்கிருந்து பிரேமா வீடு திரும்புகின்ற வழியில், ஆய்வாளர்
ஆறுமுகம், காவலர்கள் சுதாகர், அறிவழகன் மற்றும் அடையாளம் தெரிந்து பெயர் தெரியாத ஒரு
காவலர் ஆகியோர் பிரேமாவை வழிமறித்து விசாரித்தனர். உன் கணவர் மீது பல வழக்குகள்
உள்ளன என்று கூறினார்கள்.

மறுநாள் காலையில் காவலர்கள் தொடர்பு கொண்டு, இந்திரா நகரில் உள்ள ராணி & ராணி என்ற
தங்கும் விடுதிக்கு வரச் சொன்னார்கள். குழந்தைகளுடன் பிரேமா அங்கே சென்றார். உன் கணவர்
செல்வமுருகன் மீது திருட்டு வழக்கு போடப் போகின்றோம்; 10 பவுன் செயின்
கொடுத்துவிட்டால், வழக்குப் பதியாமல் விட்டு விடுகின்றோம் என்று மிரட்டி, அவரை வீட்டுக்கு
அனுப்பி விட்டார்கள்.
அக்டோபர் 30 அன்று, நெய்வேலி நகர காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்தார்கள். பிரேமா
அங்கே சென்றபோது, செல்வமுருகனை, காவல் நிலையத்தில் இருந்து வெளியே அழைத்து
வந்தார்கள். அவர், தன் மனைவி பிள்ளைகளைப் பார்த்துக் கதறி அழுதார். தன்னை அடித்துச்
சித்திரவதை செய்து, திருட்டுக் குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி மிரட்டியதாகச் சொன்னார்.
அவரால் நடக்க முடியவில்லை. இந்த நிலையில், காவலர்கள் பிரேமாவையும் அடித்து மிரட்டி,
அவரிடம் சில காகிதங்களில் கையெழுத்து வாங்கினார்கள்; இங்கே நடந்ததை வெளியே
சொல்லக்கூடாது என மிரட்டி அனுப்பினார்கள்.

அன்று இரவு மீண்டும் பிரேமாவைத் தொடர்பு கொண்டு, 5000 ரூபாய் கொண்டு வர வேண்டும்
என்றார்கள். பிரேமா, தன் உறவினர் மூலமாக 5000 ரூபாய் கொடுத்து அனுப்பினார். அதன்பிறகு,
செல்வமுருகனைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. அவர் விருத்தாசலம் கிளைச் சிறையில்
இருப்பதாகக் கேள்விப்பட்டு, நவம்பர் 2 ஆம் நாள் பகல் 12 மணி அளவில், பிரேமா, தன்
குழந்தைகளுடன் அங்கே சென்றார்.

அப்போது செல்வமுருகனை, காவலர்கள் கைத்தாங்கலாக
அழைத்து வந்தார்கள். அவரால் நடக்க முடியவில்லை. விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு
அழைத்துச் சென்றார்கள். அங்கேயே அவரைச் சேர்த்து மருத்துவம் செய்யுமாறு கேட்டபோது
மறுத்து, 2 மணி நேரம் கழித்து, மீண்டும் சிறைக்கு அனுப்பி விட்டார்கள்.

மீண்டும் 4 ஆம் தேதி இரவு 11 மணி அளவில் அழைத்து, செல்வமுருகன் விருத்தாசலம்
மருத்துவமனையில் இருப்பதாகக் கூறி, அங்கே சென்று பார்க்கும்படிக் கூறினார்கள். பிரேமா
அங்கே சென்றபோது, அவர் இறந்து விட்டதாகக் கூறினார்கள்.
நெய்வேலி காவல் நிலையத்தில் அவரை அடைத்து வைத்து அடித்துச் சித்திரவதை
செய்ததால்தான், அவர் இறந்து உள்ளார்.செல்வமுருகன் உடலை, வெவ்வேறு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த இரண்டு மருத்துவர்கள்
உடல்கூறு ஆய்வு செய்ய வேண்டும்.

அப்போது, செல்வமுருகன் உறவினர் ஒருவர் உடன் இருக்க
வேண்டும்; உடல்கூறு சோதனைகளை காணொளிப் பதிவு செய்ய வேண்டும்; அந்தக்
காணொளிப் பதிவின் ஒரு படியை, பிரேமாவிடம் வழங்க வேண்டும்; நெய்வேலி காவல் நிலைய
ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மீது, கொலை வழக்கு பதிவு செய்து, சிபிசிஐடி விசாரணை செய்ய
வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.
‘தாயகம்’ வைகோ
சென்னை – 8 பொதுச் செயலாளர்,
06.11.2020 மறுமலர்ச்சி தி.மு.க.,

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.