ஆயிரம் ரூபா நாட் சம்பளம் அடிப்படை சம்பளமாகவும் நிபந்தனையற்றதாகவும் இருக்க வேண்டும்…

ஆயிரம் ரூபா நாட் சம்பளம் அடிப்படை சம்பளமாகவும் நிபந்தனையற்றதாகவும் இருக்க வேண்டும். தவிர மொத்த கூட்டுத்தொகை சம்பளமாக இருந்தால் ஏற்க மாட்டோமென மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வே.இதாராகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்றுவரும் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

தோட்டத் தொழிலாளர்கள் 200 வருடங்களாக லயக் அறைகளில்தான் வாழ்கின்றனர். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் 7 பேர்ச் காணியுடன் அவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. ஆனால், இன்று தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடமைப்புக்கு என்ன நடந்துள்ளது?. அதை பற்றி எவரும் பேசுவதில்லை. வரவு – செலவுத் திட்டத்தில் எவ்வித யோசனைகளும் அதற்காக முன்வைக்கப்படவில்லை.

அதேபோன்று 1000 ரூபா சம்பளம் பற்றி பேசப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் என்றால் அவர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் மாத்திரம்தான் பிரச்சினை என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். அதை தவிர வேறு எதை பற்றியும் பேசுவதில்லை. 1000 ரூபா சம்பளப் பிரச்சினைக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தோட்டத் தொழிலாளர்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன. வீடுகள் இல்லை, கல்வி வசதி இல்லை, சுகாதார வசதிகள் இல்லை, பொருளாதாரப் பிரச்சினை, பாதைகள் அபிவிருத்தி என பல்வேறு அபிவிருத்திகள் தொடர்பிலான முன்மொழிவு வரவு – செலவுத் திட்டத்தில் இல்லை.

1000 ரூபா சம்பளம் என்பது 5 வருடங்களுக்கு முன்பு முன்வைத்த யோசனையாகும். அதனையே பிரதமர் மீண்டும் முன்மொழிந்துள்ளார். 22 தோட்டக் கம்பனிகளும் ஒத்துக்கொண்டால்தான் அதனையும் வழங்க முடியும்.1000 ரூபா வழங்கப்பட்டால் அதனை வரவேற்கிறோம்.

ஆனால், அது அடிப்படை சம்பளமாக இருக்க வேண்டும். நிபந்தனையற்ற விதத்தில் 1000 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும். மாறாக ஒட்டுமொத்த கூட்டுத்தொகையாக இருக்கக் கூடாது. அவ்வாறான சம்பளத்தை ஏற்க மாட்டோம் என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.