மாறுவேடத்தில் சென்று கிளி கும்பலை பிடித்த அதிகாரிகள் சென்னையில் சம்பவம் !

சென்னையில் பாதுகாக்கப்பட்ட வகை கிளிகளை சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்த கும்பலை வனத்துறை அதிகாரிகள் கையும், கிளியுமாக பிடித்துள்ளனர்.

இந்திய வனத்துறையால் பாதுகாக்கப்பட்ட கிளி வகைகளாக வகைப்படுத்தப்பட்ட கிளிகளை வீடுகளில் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் ஒரு கும்பல் இந்த வகை அரிய கிளிகளை பிடித்து சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து விற்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

அதை தொடர்ந்து கிளி கும்பலை பிடிக்க கிண்டி வனத்துறை தனிப்படை அமைத்துள்ளது. சமூக வலைதளத்தில் இவ்வாறு இந்திய பெருங்கிளிகள், மலை கிளிகள் விற்பனைக்கு உள்ளதாக வந்த விளம்பரத்தை வைத்து கிளிகள் வாங்க பேரம் பேசியுள்ளனர் அதிகாரிகள். அவர்களும் அதிகாரிகளை சாந்தோம் வர சொல்ல அங்கு சென்ற அதிகாரிகள் இளைஞர்கள் இருவரை கையும், கிளியுமாக பிடித்துள்ளனர். அவர்களிடம் இருந்த 11 அரியவகை கிளிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் மூலமாக மேலும் சிலரை கைது செய்துள்ளதாகவும் பல அரியவகை கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்