இலங்கையின் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் – வைகோ அறிவிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதைக் கண்டித்து, இலங்கையின் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தவுள்ளதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ அறிவித்துள்ளார்.

இந்த முற்றுகைப் போராடடம், எதிர்வரும் 11ஆம் திகதி சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகப் பகுதியில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக, வைகோ இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,

“இலங்கைத் தீவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் எழுப்பப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியுடனான நினைவு முற்றத்தை இரவு நேரத்தில் விளக்குகளை அணைத்துவிட்டு இராணுவப் பாதுகாப்புடன் இடித்துத் தகர்த்துள்ளனர்.

இனப்படுகொலையின் அடையாளங்கள்கூட இருக்கக் கூடாது என்பதற்காக மாவீரர் துயிலகங்களை இடித்ததுடன் இப்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றமும் இடிக்கப்பட்டுள்ளது. இது கொடுமையிலும் கொடுமை ஆகும்.

உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன் கூறிய, ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து மண்ணில் புதைத்தாய்; இந்த மண்ணை எங்கே கொண்டுபோய் புதைப்பாய்? என்பதை நினைவில் கொள்வோம்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்று திரும்பிய 48 மணி நேரத்திற்குள் இந்த அராஜகம் அரங்கேறியுள்ளது. இந்திய அரசு, சிங்கள அரசுடன் கொஞ்சிக் குலாவுவதால் நாம் என்ன செய்தாலும் உலகத்தில் கேள்வி கேட்பார் யார் என்ற மமதை தலைக்கு ஏறியுள்ளது.

அனைத்துலகத்தின் மனசாட்சி செத்துப்போய் விட்டதா? நடந்த அக்கிரமத்திற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்காவிடில் கூட்டுக் குற்றவாளியாகவே தொடர்கிறது எனக் குற்றம் சாட்டுவோம்.

யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் நினைவு முற்றமும் நினைவுத் தூணும் அமைக்கப்பட வேண்டும்.

இனப்படுகொலைக்கு எதிராக முத்துக்குமார் உள்ளிட்ட 19 வீரத் தமிழர்கள் தீக்குளித்து மாண்டனரே, அந்த நெருப்பு நம்முடைய நெஞ்சிலே பற்றட்டும்.

நெஞ்சைப் பதற வைக்கும் இந்தக் கொடிய சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் வரும் 11ஆம் திகதி காலை 11 மணிக்கு என்னுடைய தலைமையில் நடைபெறும்.

தமிழ் உணர்வாளர்கள், ஈழத் தமிழ் உணர்வாளர்கள், ம.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று வேதனையோடு வேண்டுகிறேன்” என வைகோ தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்