இந்தியாவின் உத்தராகண்ட மாநிலத்தின் சமொலி மாவட்டத்தில் பெரும் பனிச்சரிவு மற்றும் வெள்ளம் 170 பேர் காணாமல் போயுள்ளனர்!

இந்தியாவின் உத்தராகண்ட மாநிலத்தின் சமொலி மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட பெரும் பனிச்சரிவு மற்றும் அதனைத் தொடர்ந்து ஆறு பெருக்கெடுத்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இந்த அனர்த்தங்களில் சிக்கி 170 பேர் காணாமல் போயுள்ளதாக உத்தராகண்ட் மாநிலத்தின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

காணாமல் போனவர்களை தேடிக் கண்டறிந்து மீட்கும் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன.

இதுவரை 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

இதேவேளை, பனிச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கிக் காணாமல் போயிருந்தவர்களில் 16 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

பனிச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கிக் காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் பொதுத்துறை நிறுவனமான தேசிய அனல் மின் நிலையம் (NTPC) மற்றும் ரிஷி கங்கா மின் திட்டம் ஆகியவற்றில் பணியாற்றிக்கொண்டிருந்த தொழிலாளர் என உத்தராகண்ட் மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் நேற்று மாலை தெரிவித்துள்ளார்.

வெள்ளப்பெருக்கின் வேகம் மிகவும் அதிகமாக இருந்ததால் பனிச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து மிகவும் தள்ளி உள்ள பகுதிகளில் கூட இறந்த உடல்கள் சிக்கியுள்ளன. சில உடல்கள் ஆழமான பகுதிகளிலும் சுரங்கப் பாதைகளிலும் சிக்கியுள்ளன. இதன் காரணமாக மீட்புப் பணிகளில் சிக்கல் உள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி அமரேந்திரகுமார் செங்கர் தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை, சமொலி மாவட்டத்தின் ரெனி எனும் கிராமத்தில், நந்தா தேவி பனிப்பாறையில் திடீர் பனிச் சரிவு ஏற்பட்டது.

இதனால் தெளலிகங்கா மற்றும் அலக்நந்தா ஆகிய ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு உண்டானது.

இதனால் தேசிய அனல் மின் நிலையம் மற்றும் ரிஷி கங்கா மின் திட்ட கட்டுமானங்கள் வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டன. அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த தொழிலாளர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.