ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க, இந்திய அரசு கடமை ஆற்ற வேண்டும் வைகோ வேண்டுகோள்…

வைகோ வேண்டுகோள்

2009 ஆம் ஆண்டு, சிங்கள இனவெறி அரசு நடத்திய இனப்படுகொலைத் தாக்குதலில், 1.37  இலட்சம் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக, மார்சுகி தாருஸ்மன் தலைமையில், ஐ.நா. மன்றம் அமைத்த மூவர் குழு அறிக்கை அளித்து, பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகின்றன. ஆனால், இன்றுவரையிலும், இலங்கை அரசின் மீது எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை; இனப்படுகொலைக் குற்றவாளிகளை, பன்னாட்டுக் குற்ற இயல் நீதிமன்றத்தில் நிறுத்தி, விசாரணை மேற்கொள்ளவும் இல்லை. இலட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொடுத்த ஈழத்தமிழர்களுக்கு இன்று வரை நீதி கிடைக்கவும் இல்லை.

மாறாக, இனப்படுகொலைக் குற்றத்தை, போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் என வருணித்து, இரண்டு தரப்பினரையும் குற்றவாளிகள் ஆக்கி, இலங்கை அரசைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளையே வல்லரசு நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இலங்கை அரசுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கின்ற அவலமும் நிகழ்கின்றது.

இனப்படுகொலையாளர்கள், இலங்கைத் தீவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி விட்டனர். இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை, விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஒதுக்கித் தள்ளிவிட்டனர். போர்க்குற்றங்களை நாங்களே விசாரிப்போம் எனக் கூறி, ஐ.நா.மன்றத்திலும், மனித உரிமைகள் மன்றத்திலும், காலக்கெடு பெற்றனர். ஆனால், பத்து ஆண்டுகள் கடந்தபின்னரும், எந்தவிதமான விசாரணையும் இல்லை. இறுதிக்கட்டப் போரின் போது சிறைப்பிடித்துக் கொண்டு போன ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களின் நிலை என்ன என்பது இன்றுவரை தெரியவில்லை; மாறாக, அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை என்றே ஆணவத்துடன் பேசி வருகின்றனர். எட்டுத் தமிழ் இளைஞர்களை அம்மணமாக்கி, தரையில் உட்கார வைத்து, பிடரியில் சுட்டுக்கொன்றது போல, காணாமல் போன இளைஞர்களையும் சுட்டுக்கொன்று விட்டதாகவே தெரிகின்றது.

ஐ.நா. மன்றத்திலும், மனித உரிமைகள் மன்றத்திலும், ஈழத்தமிழர்களின் அவலக்குரல் எத்தனையோ முறை ஒலித்துவிட்டது. அந்த மன்றத்தின் 36 ஆவது கூட்டத்தொடரில், நான் பங்கேற்றுப் பேசினேன். தனித்தமிழ் ஈழம் அமைப்பதுதான், ஈழத்தமிழர்களுக்கு ஒரே தீர்வு; அதற்காக பொது வாக்குப்பதிவு நடத்த வேண்டும்; உலகம் முழுமையும் பல்வேறு நாடுகளில் பரவி இருக்கின்ற ஈழத்தமிழர்கள், அந்த வாக்குப்பதிவில் பங்கேற்க ஆவன செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன்.

ஆனால், இலங்கை அரசும், அதற்கு ஆதரவாக நிற்கின்ற இந்தியா உள்ளிட்ட வல்லரசுகளும், ஈழத்தமிழர்களுக்கு இன்றுவரையிலும் நீதி கிடைக்காமல் உலக அரங்கில் தடுத்து வருகின்றன.

தற்போது, ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் 46 ஆவது கூட்டத்தொடர், ஜெனீவா நகரில் நடைபெற்று வருகின்றது. இப்போதும், மனித உரிமைகள் மீறல் குற்றங்களை விசாரிக்க, தனக்கு மீண்டும் கால நீட்டிப்புத் தேவை என, பிரித்தானிய அரசின் மூலம் தீர்மானம்  கொண்டு வர, இலங்கை அரசு முனைந்து வருகின்றது.

இலங்கை அரசின் சூழ்ச்சிக்கு, பிரித்தானிய அரசு துணைநிற்கக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து, பிப்ரவரி 27 ஆம் நாள் முதல், திருமதி அம்பிகை செல்வகுமார் அவர்கள், லண்டனில் உண்ணாநிலை அறப்போர் மேற்கொண்டு வருகின்றார். அவர், ஐந்தாம் வகுப்பு முதல், முதுநிலைப் படிப்பு  வரை தமிழ்நாட்டில் பயின்றவர். தற்போது, இலண்டனில் மனித உரிமைகள் செயல்பாட்டாளராகக் களமாடி வருகின்றார்.

இலங்கை அரசின் இன அழிப்புக் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் ஆகியவற்றை, பன்னாட்டுக் குற்ற இயல் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லுமாறு, ஐ.நா. பொதுப்பேரவைக்கும், பாதுகாப்பு அவைக்கும் பரிந்துரை செய்யும் தீர்மானத்தை, மனித உரிமைகள் மன்றம், இந்தக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும்;
ஈழத்தமிழர்களுக்கு எதிரான பன்னாட்டுச் சட்ட மீறல்கள் குறித்த சாட்சியங்களைப் பாதுகாப்பதற்கு, மியான்மர் மற்றும் சிரியாவுக்கு அமைத்ததைப் போன்ற, பன்னாட்டுப் பொறி அமைவு ஒன்றை உருவாக்க வேண்டும்;
இலங்கையில் நடைபெற்று வருகின்ற மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்க, ஐ.நா. சிறப்புப் பிரதிநிதி ஒருவரை பொறுப்பு அறிவிக்க வேண்டும்;
ஐ.நா. மேற்பார்வையில், தனித்தமிழ் ஈழம் அமைக்கப் பொது வாக்குப் பதிவு நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, இலட்சக்கணக்கான தமிழர்கள் பங்கேற்ற எழுச்சிப் பேரணி, இலங்கையில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலும் நடைபெற்றது.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, இலண்டனில் அறப்போர் நடத்தி வருகின்ற அம்பிகை அம்மையாரின் உடல் நலனில் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். அவரது உயிரைக் காக்க வேண்டிய பொறுப்பும், ஈழத்தமிழர்களுக்கு விடியல் பெற்றுத் தருகின்ற  மனித நேயக் கடமையும் இந்திய அரசுக்கு உள்ளது; அதற்கு ஏற்ற வகையில், ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் இந்திய அரசு செயல்பட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்