தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா வாழ்த்து!

சென்னை : தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு, பாப்புலர் ஃப்ரண்ட்  ஆப் இந்தியா மாநிலத் தலைவர் முகம்மது சேக் அன்சாரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  மேலும்
கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை மீட்க அரசுடன் இணைந்து பணியாற்றவும்  தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் திரு மு.க.  ஸ்டாலின் அவர்களுக்கும், அமைச்சர்களுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிகாரிகளுக்கும் நெஞ்சார்ந்த  வாழ்த்துகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில்  தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரும் சவாலான கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொறுப்பை ஏற்றிருக்கிற புதிய அரசு, தமிழக மக்களின் அச்சத்தை போக்கி அவர்களின் இயல்பு வாழ்வை உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டும், தொற்று நோயால் பீடிக்கப்பட்டும் இருக்கின்ற மக்களுக்கு அரசோடு இணைந்து தேவையான உதவிகளை செய்ய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தயார் நிலையில் உள்ளது.

கடந்தாண்டு கொரோனா தொற்றின்  முதல் அலையின் போது பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் தன்னலம் பாராமல்   களப்பணியாற்றியுள்ளனர். அதேபோன்று தற்போது உள்ள நெருக்கடியான சூழ்நிலையிலும்  நிவாரணம் வழங்குவது, மருத்துவ உதவி கிடைக்க செய்வது, தொற்றால் பாதிக்கப்பட்டு  இறந்தவர்களின் உடலை உறவினர்கள் கூட முன்வராத நிலையில் அவர்களை கண்ணியமான முறையில் இறுதி சடங்கு செய்வது என்று பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர்.

எனவே கொரோனா தொற்றின் பாதிப்பில் இருந்து மக்களை மீட்கும் பணியில் பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்களின் தன்னலமற்ற சேவைகளை தமிழக அரசு  பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என இத்தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்