லேப்டாப் வாங்க சேமித்த பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சிறுமி; லேப்டாப் பரிசளித்த எம்.எல்.ஏ!

விழுப்புரம் அருகே உள்ள அளிச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கதனேசன் – தமிழ்ச்செல்வி தம்பதியினர். இவர்களுடைய 10 வயது மகள் சிந்துஜா. அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.
ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இச்சிறுமி, அதன் மூலம் கிடைத்த பரிசுத் தொகை மற்றும் பெற்றோர்கள் கொடுக்கும் தொகையை உண்டியல் மூலம் மடிக்கணினி வாங்குவதற்காகச் சேர்த்து வைத்து வந்துள்ளார்.
கொரோனா வைரஸால் துன்பத்தில் வாடும் மக்களுக்கு பலரும் நிவாரண நிதி கொடுத்து வருவதைச் செய்தியின் மூலம் அறிந்துகொண்ட அச்சிறுமி, தன்னால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என்று தான் சேர்த்து வைத்திருந்த உண்டியல் சேமிப்புத் தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சிந்துஜாவின் தந்தை கதனேசனிடம் பேசினோம்.
“எனக்கு இரண்டு பசங்க. மூத்தவள்தான் சிந்துஜா. அவங்களுக்கு ஓவியம் வரைவதுனா ரொம்ப விருப்பம். பள்ளி அளவில நடந்த ஓவியப் போட்டியில் கலந்துகிட்டு 2-ம் இடம் பிடிச்சாங்க. அதற்காக அவருடைய தலைமை ஆசிரியர் ரூ.500 பரிசுத்தொகை கொடுத்தார். அந்தத் தொகையோடு நாங்க அவ்வப்போது கொடுக்கும் தொகையையும் சேர்த்து வைச்சாங்க. இரண்டு நாளுக்கு முன்னாடி டிவி பார்த்துட்டு, திடீர்னு என்கிட்ட வந்து, நிறைய பேர் கொரோனா நிவாரண நிதிக்குப் பணம் கொடுத்து வருவதாகவும், தான் சேர்த்து வச்சிருக்கிற தொகையை கொரோனா நிவாரண நிதிக்குக் கொடுக்க போறதா சொன்னாங்க.
அவங்க எதைக் கேட்டாலும் வாங்கித் தருவேன். அதனால, `சரிம்மா குடுங்க’ அப்படின்னு நானும் சொல்லிட்டேன். மொத்தமாக ரூ.1,677 சேமித்து வச்சிருந்தாங்க. இன்று காலையிலதான் டிடி எடுத்து அனுப்பி வைத்தேன்” என்றார்.
கொரோனா நிவாரண நிதி கொடுத்த மழலை சிந்துஜாவிடம் பேசினோம்.“வீட்டுல கொடுக்கிற காசையெல்லாம் உண்டியலில் சேமிச்சு வெச்சுக்கிட்டு வந்தேன். லேப்டாப் வாங்கணும்னு எனக்கு ஆசை. நான் நல்லா டிராயிங் பண்ணுவேன். ஸ்கூல்ல டிராயிங் காம்பெடிஷன் வச்சாங்க. அதுல கலந்துகிட்டேன். `வைட்டமின்-சி உணவை சுவைப்போம். கோவிட்-19 யைத் தவிர்ப்போம்’ எனும் தலைப்பில் ஓவியம் வரைந்து இரண்டாம் பரிசு வாங்கினேன். அந்தப் பரிசு காசையும் உண்டியலில் போட்டு சேமிச்சுக்கிட்டு வந்தேன். கார்ட்டூன், டோரா, கொரானா வைரஸ் போன்ற நிறைய ட்ராயிங் பண்ணி பைல் பண்ணி வச்சிருக்கேன்.
நான் டெய்லி டிவில செய்தி பார்ப்பேன். கொரோனாவால பாதிச்சு குழந்தையை விட்டுட்டு அம்மா, அப்பா சிலர் இறந்துடுறாங்க. அந்த குழந்தைகள் எல்லாம் பாவம். அதனாலதான் எனக்கு கொரோனா நிதி கொடுக்கணும்னு தோணுச்சு. எனக்கு எதிர்காலத்துல கலெக்டர் ஆகணும்னு ஆசை” என்றார் சிந்துஜா மழலை மாறாத குரலில்.
மடிக்கணினி வாங்குவதற்காக வைத்திருந்த சேமிப்புத் தொகையை, சிறுமி கொரோனா நிவாரண நிதிக்குக் கொடுத்ததை அறிந்த மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, அச்சிறுமியை நேரில் அழைத்து சான்றிதழ் ஒன்றை அளித்துப் பாராட்டியுள்ளார்.
அதேசமயம், விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ-வாக உள்ள ஆர்.லட்சுமணன், சிறுமி சிந்துஜாவுக்கு மடிக்கணினி ஒன்றையும் வாங்கி அளித்துள்ளார். அதைத் தன் பெற்றோர்களுடன் வந்து பெற்றுக்கொண்டுள்ளார் சிந்துஜா.
-விகடன்-

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்