முல்லைத்தீவு வட்டுவாகலில் பதற்றம்!

முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அரசாங்கம் கோட்டாபய கடற்படை முகாமுக்கு சுவீகரிக்கும் நடவடிக்கைக்காக இன்று (29)அளவீடு செய்யப்படவிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குழப்பம் உச்சமடைந்த நிலையில் சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் வருகைதந்து மக்களின் கோரிக்கைகளை அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்திய நிலையில், அரசாங்க அதிபர் ஊடாக நிலஅளவை திணைக்களத்திற்கு விடயம் எடுத்துக் கூறப்பட்டு அளவீட்டுப்பணிகள் நடைபெறாது என போராட்டக்காரர்களிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

கடற்படை முகாமிற்குள் சென்ற நில அளவைத்திணைக்கள அதிகாரிகளே இதனை சொல்ல வேண்டும், அவர்கள் உடனடியாக வெளியே வரவேண்டும் எனக் கோரியபோது, நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் போராட்ட காரர்களிடம் வந்தவேளை – குறித்த அதிகாரி உதவி பொலிஸ் அத்தியட்சகர் அவர்களை திருப்பி வேறு வழி ஊடாக அனுப்ப முற்றபட்ட வேளை போராட்டகாரர்கள் வானத்தினை மறிக்க முற்பட்டனர்.

இதனால், பொலிசார் போராட்டகாரர்களை தள்ளிவிட்டு வாகனத்தினை எடுத்துச் செல்ல அனுமதித்துள்ளார்கள். இதன்போது முல்லைத்தீவு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகரின் கைபேசி கீழே விழுந்துள்ளதுடன் பொலிசார் போராட்ட காரர்களை தள்ளி வாகனத்தினை புதுக்குடியிருப்பு நோக்கி பயணிக்க சொல்லியுள்ளார்கள்.

இதனால் அங்கு மேலும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் கடற்படை முகாமுக்குள் சென்றுள்ளார்.

இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை புலனாய்வாளர்கள், பொலிஸார், கடற்படையினர் என பல்வேறு தரப்பினரும் புகைப்படம், வீடியோ எடுத்து அச்சுறுத்தும் முகமாக செயற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.