மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகள், தமிழ் வரலாற்று ஆவணங்கள் அனைத்தையும் 6 மாதத்திற்குள் சென்னைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.

மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகள், தமிழ் வரலாற்று ஆவணங்கள் அனைத்தையும் 6 மாதத்திற்குள் சென்னைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது.

1966 ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் அளவீட்டு துறை மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி, கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் மொழிவாரியாகவும், அகரவரிசைப்படியும், எண்ணிக்கையின்படியும் வகைப்படுத்தியதில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டின் கல்வெட்டுகள் தான் முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக, 1966 ஆம் ஆண்டில்,  தமிழில் 20000 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. கன்னடம் 10,600,  சமஸ்கிருதம் 7,500, தெலுங்கு 4500 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.

1887 முதல், சுமார் நானூறு ஆண்டுகளாக, கண்டறியப்பட்ட ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட கல்வெட்டுக்களின் படிகள் இந்த இந்திய தொல்லியல் அளவீட்டு துறையின் மைசூர் அலுவலகத்தில் உள்ளன. இங்கு உள்ள ஒரு லட்சம் கல்வெட்டில் 65 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழில் உள்ளன. இக்கல்வெட்டுகள், தமிழர்களின் தொன்மையும், பண்பாட்டையும், வீரத்தையும் எடுத்துரைக்கும் சான்றுகளாகும்.

மைசூரில் உள்ள தொல்லியல் துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழ் கல்வெட்டுகளை, பாதுகாக்கவோ, பராமரிக்கவோ, தமிழ் தெரிந்த தொல்லியல் அறிஞர்களை, ஒன்றிய அரசும் நியமிக்கவில்லை. அதனால், மிக முக்கிய ஆவணங்களான கல்வெட்டுப்படிகள், தமிழ் தெரியாத அலுவலர்களால் அழிக்கப்படுகிறது. அதே போன்று, பன்முகத்தன்மை வாய்ந்த இந்தியாவை ஒரே நாடு என்ற நிலை நிறுத்த விரும்பும் ஒன்றிய அரசு மற்றும் ஆர்.எஸ்.எஸ் போன்றவை, தமிழர்களின் கலாச்சாரத்தின் மீது வெறுப்பு கொண்டு, தமிழ் கல்வெட்டுகளையும், இதுவரை எடுத்த படிகளையும் அழிக்க முயன்று வருகின்றனர்.
தமிழகம் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள், மைசூருவுக்கு சென்று, கல்வெட்டு படிகளை ஆய்வு செய்ய அனுமதி கேட்டால், அங்குள்ள வட இந்திய அலுவலர்கள், அனுமதி மறுக்கின்றனர்.

இந்த நிலையில், மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகள், தமிழ் வரலாற்று ஆவணங்கள் அனைத்தையும் 6 மாதத்திற்குள் சென்னைக்கு இடமாற்றம் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருப்பது வரவேற்கதக்கது. மேலும், கல்வெட்டியல் கிளையை தமிழ் கல்வெட்டியல் கிளை என பெயர் மாற்றம் செய்யவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

எனவே, உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவின்படி, தமிழர்களின் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கும் வகையில் மைசூருவில் வைக்கப்பட்டு உள்ள தமிழ்நாட்டின் கல்வெட்டுகள், தொல்லியல் ஆவணங்களை உடனடியாக சென்னை தொல்லியல் துறை அலுவலகத்திற்கு மாற்றவும்,   அக்கல்வெட்டுகள், ஆவணங்களை படிமம் எடுத்து டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.