தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு புதிய நலத்திட்டங்கள் அறிவிப்பு…

தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு புதிய நலத்திட்டங்கள் அறிவிப்பு 

தமிழ்நாட்டில் உள்ள 108 அகதிகள் முகாம்களில் 58,822 இலங்கைத் தமிழ் அகதிகளும்  முகாம்களுக்கு வெளியே 34,087 அகதிகளும் வசித்து வரும் நிலையில், அவர்களுக்கான புதிய நலத்திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் இன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் அறிவித்திருக்கிறார். 

“இலங்கை நாட்டில் வாழும் தமிழ் மக்கள் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக் கலவரத்திற்குப் பிறகு, கடல் கடந்து தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கினார்கள். அத்தகைய தமிழ் மக்களை அன்று முதல் இன்று வரையிலும் நாம் அரவணைத்துக் காப்பாற்றி வருகிறோம்; அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கி வருகிறோம்,” என தனது உரையில் குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதைத் தொடர்ந்து மொத்தம் 317 கோடியே 40 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை அறிவித்தார்.  

*முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர்களுக்கு மின் வசதி, கழிப்பிட வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

*முகாம்களில் உள்ள வீடுகள் மிகவும் பழுதடைந்திருக்கின்றன. புதிதாக 7,469 வீடுகள் 231 கோடி செலவில் கட்டித்தரப்படும். இதில், முதற்கட்டமாக 108 கோடி ரூபாய் மதிப்பில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும்.

*இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். 

*இலங்கை தமிழர்களின் குழந்தைகள் கல்வி மேம்பட முதல் ஐம்பது மாணவர்களுக்கு கல்வி விடுதி கட்டணத்தை அரசே ஏற்கும். மதிப்பெண் அடிப்படையில் வேளாண் படிப்புகளில் கல்வி மற்றும் விடுதி கட்டணங்கள் ஏற்கப்படும். இதற்காக ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

*இலங்கை தமிழர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதியாக தலா ஒரு லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்படும்.

*முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு அவர்கள் பெறும் முழு அரிசின் அளவும் விலையில்லாமல் வழங்கப்படும்.

*கடந்த பத்தாண்டு காலமாக உயர்த்தப்படாத நிலையில், இனி குடும்பத் தலைவருக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய், இதர பெரியவர்களுக்கு 1,000 ரூபாய் மற்றும் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 500 ரூபாய் என்று உயர்த்தி வழங்கப்படும்.

*முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு கோ-ஆப்டெக்ஸ்மூலம் ஒவ்வோர் ஆண்டும் இலவச ஆடைகளும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இலவசப் போர்வைகளும் வழங்கக்கூடிய திட்டத்தில் ஒன்றிய அரசு நிர்ணயித்த விலையில் ஆடைகள் வாங்கி வழங்க இயலாத நிலையில், நடப்பு ஆண்டிற்கு பெறப்பட்ட விலைப்புள்ளிகளின் அடிப்படையில் குடும்பம் ஒன்றிற்கு 1,790/- ரூபாயிலிருந்து, குடும்பம் ஒன்றுக்கு, 3,473/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

*முகாம்களில் வசிக்கக்கூடிய இலங்கை அகதிகளுக்கும், வெளிப்பதிவில் உள்ள அகதிகளுக்கும் உரிய உதவிகளை வழங்கிடவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும், குடியுரிமை வழங்குதல் மற்றும் அவர்களில் இலங்கை திரும்பும் அகதிகளுக்கு தகுந்த ஏற்பாடுகள் செய்தல் போன்ற நீண்டகாலத் தீர்வினைக் கண்டறிய ஏதுவாகவும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், பொதுத் துறை செயலாளர், மறுவாழ்வுத் துறை இயக்குநர் மற்றும் பிற அரசு உயர் அலுவலர்கள், அரசு சாரா உறுப்பினர்கள், முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுடைய பிரதிநிதி மற்றும் வெளிப்பதிவில் வசிக்கக்கூடிய அகதிகளுக்கான பிரதிநிதி ஆகியோரை உள்ளடக்கிய ஒரு ஆலோசனைக் குழு விரைவில் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்