மின் தேவையை உணர்ந்து நிலக்கரி பற்றாக்குறையை தீர்க்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

மின் தேவையை உணர்ந்து நிலக்கரி பற்றாக்குறையை தீர்க்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
இந்தியாவின் மின் உற்பத்தி 70 விழுக்காடு நிலக்கரியை நம்பி இருக்கும் நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள நிலக்கரி பற்றாக்குறையால் பல்வேறு மாநிலங்களில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக, கர்நாடகா, டெல்லி, ராஜஸ்தான், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மின் விநியோகம் பாதிக்கப்படுவதற்கான சூழல் உள்ளது.
கொரோனா ஊடரங்கிற்கு பின்னர், தொழிற்சாலைகள் முழுமையாக இயங்கி வரும் இச்சூழலில், வருமானத்தை இழந்து தவித்து வந்த தொழிலாளர்கள் தற்போது தான் பணிக்கு செல்ல தொடங்கியுள்ளனர். பண்டிகை காலங்களும் தொடங்கி விட்டன.
இந்த நிலையில், நிலக்கரி பற்றாக்குறையால், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டால், தொழிற்சாலைகள் மீண்டும் மூடப்படும் நிலை ஏற்படும். தொழிலாளர்கள் வேலையிழந்தும், வருமானத்தை இழந்தும் வீட்டிற்குள்ளே முடங்கும் அபாயம் உள்ளது. முக்கியமாக, விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும். இதனால், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.
நாட்டின் நிலக்கரி இருப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதை ஒப்புக்கொண்டுள்ள ஒன்றிய அரசு, மின் உற்பத்தி செய்யக்கூடிய சில தனியார் நிறுவனங்கள் மீது குற்றம் சுமத்தி விட்டு தப்பித்து கொள்ளலாம் என நினைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. பற்றாக்குறையை ஏற்றுக்கொண்ட ஒன்றிய அரசு, மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி வழங்கப்படுவதாக கூறுவது முரண்பாடானது.
மேலும், வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதற்கான செலவு அதிகரித்துள்ளது என்றும் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு அதிகளவில் நிலக்கரி இறக்குமதி செய்ய முடியவில்லை எனவும் ஒன்றிய அரசு விளக்கமளிப்பது பொறுப்பற்ற தன்மையாகும்.
நிலக்கரி பற்றாக்குறை தொடர்ந்து நிலவினால், நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை மேலும் அதாள பாதாளத்திற்கு செல்லும்.
எனவே, நிலக்கரி பற்றாக்குறை தீர்க்கவும், பற்றாக்குறை உள்ள மாநிலங்களுக்கு நிலக்கரி ஒதுக்கீட்டை அதிகரிக்கவும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, நெய்வேலி உள்ளிட்ட தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய மின், ஒதுக்கீடு செய்வதில் தமிழ்நாட்டிற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டிற்கு தேவையான மின் அளவை பெற ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை வைக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.
இதனிடையே, தமிழ்நாட்டில் ஒரு நொடிக்கூட மின்வெட்டு இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருப்பதை வரவேற்பதோடு, தமிழ்நாடு அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.