டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

டெல்டா மாவட்டங்களான கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில், தொடர் கனமழைக் காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகியுள்ளது.

ஒரு ஏக்கரில் சம்பா, தாளடி பட்டத்தில் விவசாயிகள் நெல் சாகுபடி மேற்கொள்ள குறைந்தபட்சம் 30 ஆயிரம் ரூபாய் செலவாகும். இத்தொகையை பெரும்பாலான விவசாயிகள், வட்டிக்கு கடன் வாங்கி தான் விவசாயத்தை மேற்கொண்டிருப்பார்கள். இச்சூழலில், நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி வீணாகியிருப்பது, அவர்கள் தலையில் விழுந்த பேரிடியாகும்.

எனவே, வேளாண்மையில் தொடர் வளர்ச்சியானது ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் என்பதை புரிந்துக்கொண்டு,  நீரில் மூழ்கிய விளைநிலங்களை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது.

சில விவசாயிகளின் விளைநிலங்களில் நீரில் மூழ்கிய பயிர்களை காக்கும் வகையில், போர்க்கால அடிப்படையில் நீரை வெளியேற்றும் பணிகளை தமிழ்நாடு அரசு துரிதப்படுத்த வேண்டும்.

கனமழையால், தொற்று நோய் பரவிட வாய்ப்புகள் அதிகம் என்பதால், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் திட்டமிட்டு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், அவர்களுக்கு தொடர் வருமானம் கிடைத்திடவும், மாநில அளவில் நிலையான பொருளாதார வளர்ச்சி அடைவதற்கும் வேளாண்மையில் நீடித்த வளர்ச்சியை ஏற்படுத்துவது மிகவும் இன்றியமையாததாகும்.

இதனைக் கருத்தில் கொண்டு, 2020-2021-ம் ஆண்டு பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும்.

விவசாயிகளின் நலன் கருதி நிலுவையில் உள்ள பயிர் கடனை தள்ளுபடி செய்யவும் தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும்  என்று தமிழ்நாடு அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்