திண்டுக்கல் – பொள்ளாச்சி 6 வழி தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் பாதிக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரை அகற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது.

திண்டுக்கல்  – பொள்ளாச்சி 6 வழி தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் பாதிக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரை அகற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது.

திண்டுக்கல்லிருந்து பொள்ளாச்சி வரை 6 வழி தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கான பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இச்சாலை அமைப்பதற்காக 100க்கும் அதிகமான விவசாயிகளிடம் இருந்து, அப்போதைய அதிமுக அரசு நிலங்களை கையகப்படுத்தி, ஒன்றிய நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைத்தது.

இந்த நிலையில், 6 வழிச்சாலைக்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சாலையின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, சாலையின் இருபுறமும் உள்ள விளைநிலங்களுக்குள் விவசாயிகள் செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஆடு, மாடு போன்ற கால்நடைகளை விளைநிலங்களில் சென்று மேய்க்கவோ, விளைநிலங்களில் குடியிருக்கும் விவசாயிகள் வெளியே வருவதற்கோ முடியாத நிலையை தேசிய நெடுஞ்சாலைத்துறையும், ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனமும் உருவாக்கியுள்ளது.

ஏற்கனவே, விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்த நிலங்களுக்கு, இதுவரை முறையான இழப்பீடு வழங்காத நிலையில், அத்தொகையை பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நாள்தோறும் விவசாயிகள் அலைந்து கொண்டிருக்கின்றனர்.

இச்சூழலில், சாலையின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைத்து, விளைநிலங்களுக்குள் விவசாயிகள் செல்ல முடியாத நிலையை, தேசிய நெடுச்சாலைத்துறையும், சாலை அமைக்க ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனமும்  ஏற்படுத்தியுள்ளது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

பொதுவாக, இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், இருபுறமும் மழை நீர் செல்லும் வகையில் வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், திண்டுக்கல் – பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் கால்வாய்க்கு பதிலாக, தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டிருப்பதால், மழை நீர் அருகே உள்ள விளைநிலங்களிலேயே தேங்கி, பயிர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

இதன் காரணமாக, தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் தடுப்புச்சுவரை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், தடுப்புச்சுவரை அகற்ற முடியாது, ஆனால் வழி அமைத்து தருகிறோம், அதற்கு 5 இலட்சம் செலுத்த வேண்டும், 10 இலட்சம் செலுத்த வேண்டும் என விவசாயிகளிடம், ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் பேரம் பேசி வருவது வன்மையாக கண்டிக்கதக்கது.

திண்டுக்கல் – பொள்ளாச்சி 6 வழி தேசிய நெடுச்சாலைக்கான திட்டத்திற்கு விவசாயிகள் நிலம் கொடுக்காமல், போராட்டத்தில் இறங்கியிருந்தால், அத்திட்டம் சாத்தியமாகி இருக்காது. அதனையெல்லாம் புரிந்து கொள்ளாமல், விவசாயிகளிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்திக்கொண்டு, வழி விடுவதற்காக அவர்களிடமே பேரம் பேசுவது எவ்விதத்தில் நியாயம்?.

எனவே,  திண்டுக்கல்  – பொள்ளாச்சி 6 வழி தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் பாதிக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரை அகற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு, ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது.

மேலும், நெடுஞ்சாலை அமைப்பதற்கு நிலங்களை வழங்கிய விவசாயிகளுக்கு நியாயமான இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றும், விதிமுறைக்கு மாறாக செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்