வைகோவுடன், விவசாயிகள் சங்கத்தினர் சந்திப்பு.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் புது தில்லியில், ம.தி.மு.க.  பொதுச்செயலாளர் வைகோ அவர்களைச் சந்தித்தனர்.

இந்திய விடுதலைக்குப் பிறகு, வரலாறு காணாத வகையில் மாபெரும் அறப்போராட்டத்தை நடத்தி  வெற்றி பெற்று, விவசாயிகள் வரலாறு படைத்து விட்டனர். இந்த வெற்றி, நாடு முழுமையும்,  மக்கள் கோரிக்கைகளுக்காகப் போராடுவோருக்கு பெரும் ஊக்கம் அளித்து இருக்கின்றது என, அவர்களிடம் வைகோ கூறினார்.

உயர்மின் கோபுரங்கள், கெயில் எரிகாற்றுக் குழாய், பாரத் பெட்ரோலியத்தின் எண்ணெய்க் குழாய் பிரச்சினைகள் மற்றும் ஒன்றிய அரசின் வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள வேளாண் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்காக, சமாதானத் திட்டத்தை ஒன்றிய அரசு அறிவிக்க வலியுறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் விண்ணப்பத்தை, விவசாயிகள் சங்கத்தினர் வைகோவிடம் அளித்தனர்.

இத்தகைய சமாதான் திட்டங்களை, ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் பலமுறை அறிவித்துச் செயல்படுத்தி இருக்கின்றார்கள். குறிப்பாக, வருமான வரி, பத்திரப் பதிவுத்துறை உள்ளிட்ட அரசுக்கு வருவாய் தரும் அனைத்துத் துறைகளிலும், இத்தகைய சமாதான் திட்டங்களை அறிவித்து, வட்டி, கூடுதல் வட்டி தள்ளுபடி செய்வது வழக்கம். விவசாயிகள் முழுமையான கடன் தள்ளுபடி கோரவில்லை. ஒன்றிய அரசு வங்கிகளில் பெற்று இருக்கின்ற கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு, வட்டி, கூடுதல் வட்டி, அசலில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு குறைப்பது உள்ளிட்ட  சில சலுகைகளைக் கோருகின்றார்கள்.

வங்கிக் கடன்களுக்காக, விவசாயிகள் தங்கள் சொத்துகளை அடமானமாகக் கொடுத்து இருக்கின்றார்கள். அதன் மீது, வங்கி மேலாளர்களே நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சொத்துகளைக் கையகப்படுத்துவது, ஏலம் விடுவது போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் வங்கி மேலாளர்களே மேற்கொள்கின்றார்கள்.  கடன் வசூல் தீர்ப்பு ஆயத்தில் வழக்குத் தொடுத்து, விவசாயிகளை அலைக்கழித்து, தாங்கொணாத் துன்பத்திற்கு உள்ளாக்கி வருகின்றனர்.

எனவே. இந்தியா முழுமையும் கடன் தொல்லையால் ஆண்டுக்கு 10000 விவசாயிகள் தற்கொலை செய்து மடிகின்றார்கள். அதைத் தடுப்பதற்காக, ஒன்றிய அரசு, விவசாயிகள் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு ஏதுவாக சமாதான் திட்டம் ஒன்றை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வழங்கினர்.

இந்தக் கோரிக்கைகள் குறித்து, அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்கின்றேன் என வைகோ கூறினார்.

இந்தச் சந்திப்பில், சங்க நிறுவனர், வழக்கு உரைஞர் ஈசன் முருகசாமி, மாநிலத் தலைவர் சண்முகசுந்தரம், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காளிமுத்து, விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமரேசன், பஞ்சாப் கோல்டன் சிங் (ஆசாத் கிசான் சங்கர்ஷ் கமிட்டி), மதுரை சொக்கலிங்கம், குங்குமம்பாளையம் முத்துசாமி, லூதியானா மோகன், விருதுநகர் இராமசாமி  பங்கேற்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.