தமிழர் உரிமைப் போராட்டத்தினை நலிவடையச் செய்வதே அரசின் நோக்கமாகும் – உதயகுமார்

தமிழர் உரிமைப் போராட்டத்தினை நலிவடையச் செய்வதே பௌத்த சிங்கள பேரினவாத அரசின் நோக்கமாகும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு வேட்பாளர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேசத்தில் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பரப்புரை மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டு அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டிலே 70 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் தமது உரிமைக்காகப் போராடி வருகினறனர்.

அது ஆரம்பத்தில் அஹிம்சைப் போராட்டமாகவும் பின்பு ஆயுதப் போராட்டமாகவும் வலுவடைந்தது. தற்போது அது அரசியல் ரீதியான இராஜதந்திரப் போராட்டமாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

2009இல் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிற்பாடு தமிழர் தம் உரிமைப் போராட்டமானது சர்வதேச மயப்படுத்தப்பட்ட ஒரு இராஜதந்திர ரீதியிலான அரசியல் சார்ந்த போராட்டமாக மாறியுள்ளது.

தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வினைப் பெற்றக் கொடுக்கவும் தமிழ் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட மனிதப் படுகொலைகளுக்கம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்குமான நீதியினையும் இழப்பீடுகளையும் பெற்றுக்கொடுக்கவுமே இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதனை நாம் யாவரும் அறிறோம்.

ஆனால் இந்த பிரேரணையில் இருந்து தன்னிச்சையாக வெளியேறியமைதான் தற்போதைய புதிய ஜனாதிபதியும் அரசாங்கமும்  பொறுப்பேற்றதன் பிற்பாடு முதலில் அவர்கள் செய்த விடயம்

ஆனால் இந்தப் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியதே இலங்கை அரசுதான் என்பதையும் நாம் மறக்க முடியாது.

புதிய ஜனாதிபதி தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக சிங்கள மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாகவேதான் இந்த ஜெனிவா பிரேரணையில் இருந்து தன்னிச்சையாக வெளியேறி உள்ளார்.

அண்மைய நாட்களில் தமிழ் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் அநீதிகளைப் பார்க்கும்போது சிங்கள பேரினவாதிகளால் நன்கு திட்டமிடப்பட்ட நீண்டகால செயற்பாடாகவேதான் இதனைப் பார்க்கவேண்டி இருக்கின்றது.

இச் செயற்பாட்டின் ஒரு கட்டம்தான் தமிழர் உரிமைக்காகப் போராடும் ஒரே கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பினைப் பலவீனப்படுத்தி எமக்கான அரசியல் தீர்வில் இருந்து பின்வாங்கச் செய்யவும் ஐ.நாவின் நல்லிணக்கப் பொறிமுறையினை நடைமுறைப்படுத்தப்படாமல் தடுக்கவும் இந்தத் தேர்தலிலை இந்த அரசானது நன்கு பயன்படுத்துவதனைக் காணலாம்.

மூன்றாம்நிலை கடைக்கோடி உதிரிக் கட்சிகளான தங்களின் எடுபிடிகளை இதற்காக அரசு பயன்படுத்தியுள்ளதனையும் இதனூடாக தமிழர் உரிமைப் போராட்டத்தினை நலிவடையச் செய்வதே பௌத்த சிங்கள பேரினவாத அரசின் நோக்கமாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.