முல்லையில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு நீதிமன்றால் வழங்கப்பட்ட தடை உத்தரவுக்கு எதிராக நகர்த்தல் பத்திரம் தாக்கல்

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்று, கடந்த 20.11.2020 (வெள்ளிக்கிழமை)அன்று, மாவீரர் தினம் மேற்கொள்வதற்கு 41பேருக்கு தடை உத்தரவினைப் பிறப்பித்திருந்தது.

இவ்வாறு நீநிமன்றினால் வழங்கப்பட்ட தடைக்கட்டளைக்கு எதிராக, தடைக்கட்டளை வழங்கப்பட்டவர்கள் சார்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையிலான பன்னிரெண்டுபேர் கொண்ட குழுவினரால் 23.11.2020 இன்றைய நாள் நகர்த்தல் பத்திரம் (மோசன்)தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் மாவீரர் நாளுக்கான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டோருக்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சட்டவாளர்கள் மன்றில் ஆஜராகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் மாவட்டத்தில் நீதிமன்றால் மாவீரர் நாளுக்கு தடைவிதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக, அங்கு மன்றில் ஆஜராவதற்காக எம்.ஏ.சுமந்திரன் சென்றுள்ள நிலையில், அந்த வளக்கின் பின்னர் இது தொடர்பான வழக்கு விசாரணைகளில் ஆஜராவார் எனவும் கூறப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவில் 13 பேருக்கும் முள்ளியவளை பொலிஸ் பிரிவில் 11 பேருக்கும் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் 4 பேருக்கும் மாங்குளம் பொலிஸ் பிரிவில் 6 பேருக்கும் மல்லாவி பொலிஸ் பிரிவில் 7 பேருக்குமாக போலீஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் 41பேருக்கு மாவீரர் நாளுக்கான தடை உத்தரவினை பிறப்பிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றினைக் கோரியிருந்த நிலையிலேயே, நீதிமன்று இவ்வாறு தடை உத்தரவினைப் பிறப்பித்திருந்தது.

அதற்கமைய நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட தடைக்கட்டளைகளை, கடந்த 21.11.2020 சனிக்கிழமையன்று போலீசார் உரியவர்களிடம் கையளித்திருந்தனர்.

இந் நிலையில் நீதிமன்றத்தினால் இவ்வாறு வழங்கப்பட்டுள்ள தடை உத்தரவுக்கு எதிராக தடைக்கட்டளை வழங்கப்பட்டவர்கள் சார்பாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான சின்னராசா லோகேஸ்வரன், கமலநாதன் விஜிந்தன், திருச்செல்வம் ரவீந்திரன், தவராசா அமலன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் ராமலிங்கம் சத்தியசீலன், துணுக்காய் பிரதேசசபை உறுப்பினர் சற்குணநாதன் சுயன்சன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி, தமிழ் ஆர்வலர்களானதம்பையா யோகேஸ்வரன்,ஞானதாஸ் யூட்பிரசாந்த், சிமித்கட்சன் சந்திரலீலாஆகியோர் அடங்கிய பன்னிரெண்டு பேர் கொண்ட குழுவினராலேயே இவ்வாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

(விஜயரத்தினம் சரவணன்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்